

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி, அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்காக 5 உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட பட்டியலை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் எனப்படும் மூத்த நீதிபதிகள் குழு அனுப்பியுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறாதது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு ஆகியவை எழுத்து வடிவில் இல்லை என்ற போதிலும், அது ஒரு மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சமூக நீதியின் அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும்போது தகுதிக்குதான் முக்கியம் என்று கூறி சமூக நீதியை புறந்தள்ளுவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகுதி இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கோரும்போது ஏதோ ஒரு மாநிலத்தில் இருப்பவர்களுக்கு சமூக நீதி கொடுக்க வேண்டும் என்று கோரி தகுதியை புறந்தள்ளுவதுமாக நீதிபதிகள் நியமனத்தில் தமிழகம்தான் பாதிக்கப்படுகிறது.
எனவே, உச்ச நீதிமன்றத்துக்கு இப்போது பரிந்துரைக்கப்பட்ட 5 நீதிபதிகள் தவிர மேலும் 3 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும், உடனடியாக நிரப்பி, அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.