Published : 24 Oct 2014 10:43 AM
Last Updated : 24 Oct 2014 10:43 AM

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம்: 29-ம் தேதி சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 29-ம் தேதி நடைபெறுகிறது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

இன்று தொடக்கம்

இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 12 மணிக்கு தீபாராதனை, 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து தங்கச்சப்பரத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாசம் சேர்ந்து தீபாராதனை நடைபெறும்.

மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 4 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரமாகி, தங்க ரதத்தில் கிரி வீதி உலா வந்து, திருக்கோயில் சேர்தல் நடைபெறும்.

நாளை முதல் 28-ம் தேதி வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

சூரசம்ஹாரம்

29 ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் போர்க்கோலம் பூண்டு, கடற்கரைக்கு எழுந்தருள்வார். அங்கு சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.

திருக்கல்யாணம்

30-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் சுவாமி மாலை மாற்று விழாவும், இரவு திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறும்

விழா நாட்களில் திருக்கோயில் கலையரங்கில் காலை, மாலை சிறப்பு சொற்பொழிவு நடை பெறும்.

ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) ரா.ஞானசேகர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x