Published : 10 Jan 2017 09:17 AM
Last Updated : 10 Jan 2017 09:17 AM

பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை ரத்து: மத்திய அரசுக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம்

திமுக சார்பில் வரும் 11-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா:

பொங்கல் திரு நாள், தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை நாளாக இருந்த நிலை மாற்றப்பட்டு, விருப்ப விடுமுறையாக அறிவிக் கப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவை அனைவரும் குடும்பமாகக் கொண்டாடி மகிழ விடுமுறை அளிப்பது மத்திய அரசின் கடமை. இந்த ஆண்டு பொங்கல் விழா சனிக்கிழமை அன்று தானே வருகிறது. அது விடுமுறை நாள்தானே என்று ஒதுக்காமல், பொங்கல் விழாவை மதிக்கும் வகையில் அதனை விடுமுறை நாளாக அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் அளிப்பது அவசியம்.

தமிழர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மத்திய அரசு உணர்ந்து ஏற்று, உடனடியாக தமிழர்களின் பெருமை மிகு பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவுக்கு கட்டாய விடுமுறை அறிவிக்க வேண்டும்.

ஜெயலலிதா மேற்கொண்ட அரும் முயற்சிகளால் தமிழர்களின் பல்வேறு உரிமைகள் நிலை நாட்டப்பட்டன. அதைப் போலவே, ஜெயலலிதா வழியில் என்றும் நடைபோடும் தமிழகம், பொங்கல் விழாவுக்கான விடுமுறையை மத்திய அரசு உடனடியாக அறி வித்து தமிழக மக்களின் எதிர்பார்ப் பையும், உரிமையையும் உறுதி செய்யும் என்று காத்திருக்கிறது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்:

பொங்கல் திரு நாள் என்பது தமிழகம் முழுவதும் சாதி, மத வேறுபாடுகள் கடந்து அனைவரும் கொண்டாடும் கலாச் சார விழாவாகும். இதற்கான விடு முறையை, கட்டாய விடுமுறையில் இருந்து மத்திய அரசு நீக்குவது என்பது இந்தியாவின் ஒருமைப் பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சியாக தெரியவில்லை என்பதை நினைக்கும்போது மிகவும் கவலை அளிக்கிறது.

இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை கேள்விக்குறியாக்கும் விதத்தில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் உச்சகட்ட வெளிப்பாடாக, தமிழர் திருநாளான பொங்கல் விழாவுக்கான கட்டாய விடுமுறையை ரத்து செய்திருக்கிறது. எனவே மத்திய அரசு உடனடியாக இந்த அறிவிப்பினைத் திரும்பப் பெறவேண்டும். கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் திருநாள் இடம்பெற வேண்டும்.

திமுக தலைமைக் கழகம்:

பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும் பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டு விளை யாட்டுக்கு அனுமதி கிடைக்காமல் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பது தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்.

மத்திய அரசு தொடர்ந்து தமிழர் களின் உணர்வுகளை புண்படுத்தி வரும் செயலினைக் கண்டிக்கும் வகையில் திமுக சார்பில் சென்னை யில் வரும் 11-ம் தேதி மாலை 4.00 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகே, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி,

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், “பொங்கல் பண்டிகை என்பது தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகையாகும்.

தமிழக மக்களின் கலாச்சாரத் துடன் பின்னிப் பிணைந்துள்ள பொங்கல் திருநாள் தமிழகத்தின் மிக முக்கியமான திருநாளாகும். எனவே, பொங்கல் தினத்தை தமிழகத்தில் பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். இந்தப் பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித் துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

தமிழர்களின் தொல் பழங்கால விழா நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை மத்திய அரசு தடை செய்தது, தமிழர்களின் இதயத்தில் வேல் பாய்ந்த வேதனை ஆகும். அந்தத் தடையை நீக்கக் கோரித் தமிழகமே கொந்தளித்துள்ள நிலை யில், தை முதல் நாளைக் கட்டாய விடுமுறை நாட்களின் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கி இருப்பது, வேல் பாய்ந்த புண்ணில் சூட்டுக்கோலைத் திணிக்கின்ற கொடுமை ஆகும். பிரதமர் நரேந்திரமோடி தலையிட்டு முதல் நாள் விடுமுறையை இதுவரை இருந்த வந்த கட்டாய விடுமுறை நாட்கள் பட்டியலில் மீண்டும் இடம் பெறச் செய்ய வேண்டுகிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:

பாஜக அரசு பொங்கல் பண்டிகையை கட்டாய அரசு விடுப்பில் இருந்து நீக்கியுள்ளது. இது மத்திய அரசின், தமிழகத்தை வஞ்சிக்கும் செயலை வெளிப்படுத்தி இருக் கிறது. பொங்கல் பண்டிகைக்கு கட்டாய அரசு விடுப்பு அளித்திருந் ததையே தொடர வேண்டும். இதற் காக பாஜக அரசு தற்போது வெளி யிட்டிருக்கும் அறிவிப்பை உடனடி யாக திரும்ப பெற வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்:

பொங்கல் திருநாள் என்பது தமிழரின் ஒரே ஒரு பண்பாட்டு அடையாளம். பல்லாயிரம் ஆண்டு காலமாக தமிழர் வாழ்வியலோடு இணைந்த இந்த இனத்தின் அடையாளத் திருநாள். இதுவரை பொங்கல் திருநாளுக்கு கட்டாய பொதுவிடுமுறை விடப்பட்டு வந்தது. ஆனால் மத்திய பாஜக அரசோ இதை ரத்து செய்துவிட்டு விருப்ப விடுமுறையாக எடுத்து கொள்ளலாம் என கூறியுள்ளது. தமிழரின் மான உணர்ச்சியை சீண்டிப் பார்க்கும் இத்தகைய அறிவிப்புகளை இந்திய பாஜக அரசு உடனே திரும்பப் பெறுவதுதான் நல்லதாக இருக்கும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

மதச்சார்பற்ற விழாவான பொங்கல் விழாவுக்கு இதுவரை இருந்துவந்த மத்திய அரசு விடுமுறையை ரத்து செய்து, வேண்டுமானால் தேவைப்படுவோர் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் வரும் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில், ஒருமித்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும். ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவஹிருல்லா:

பொங்கல் தின விடுமுறைக்கு எதிரான இந்த அறிவிப்பால் தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு இடங்களில் பொங்கலைக் கொண்டாடும் தமிழர்கள் அனை வரும் மிகுந்த கொந்தளிப்புக்கும், அதிருப்திக்கும் ஆளாகியுள்ளனர். எனவே மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x