Published : 14 Mar 2017 08:29 AM
Last Updated : 14 Mar 2017 08:29 AM

மதுக்கடைக்கான முக்கியத்துவம் ரேஷனுக்கு இல்லை - அதிமுக ஆட்சி மீது கனிமொழி குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் மதுக்கடைக்கு உள்ள முக்கியத் துவம் ரேஷன் கடைக்கு இல்லை என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 800-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 15 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ரேஷன் கடைகளில் அத்தியா வசியப் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை ராயப் பேட்டையில் உள்ள ரேஷன் கடை முன்பு கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், திமுக மகளிர் அணி புரவலர் விஜயா தாயன்பன் உள்ளிட்ட ஆயிரத்துக் கும் அதிகமானோர் பங்கேற்றனர். அதில் கனிமொழி பேசியதாவது:

திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் அரிசி, பாமாயில், பருப்பு, மண்ணெண்ணெய் உள் ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டன. அதிமுக ஆட்சி யில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ரேஷன் கடை களுக்கு 1-ம் தேதி சென்றால்கூட ‘பாமாயில் இல்லை. பருப்பு இல்லை’ என்கின்றனர். ரேஷனுக்கு வழங்குவதற்காக பாமாயில், பருப்பு உள்ளிட்டவை வாங்கப்படு வதாக அறிவிப்பு வருகிறது. ஆனால், மக்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. வாங்கும் பொருட்கள் எங்கே செல்கின்றன?

டாஸ்மாக் இணையதளத்தில் மதுவகைகளின் விலை, இருப்பு நிலவரம் உள்ளிட்ட அனைத்து விவரமும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆனால், ரேஷன் கடைகளை நடத்தும் உணவு, கூட்டுறவு துறை இணையதளங்களில் எந்த தகவலும் இல்லை. மதுவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, ரேஷன் பொருட்களுக்கு அதிமுக அரசு கொடுப்பதில்லை.

எம்எல்ஏக்களைப் பாதுகாத்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலேயே அக்கறை காட்டுகிறதே தவிர, மக்களைப் பற்றி அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை. செயலற்ற இந்த அரசை மக்கள் விரும்பவில்லை. எனவே, தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ‘‘திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு வரப் போவதாக டிடிவி தினகரன் கூறி யுள்ளார். திமுகவின் அடிப்படை தொண்டரைக்கூட அதிமுகவால் இழுக்க முடியாது’’ என்றார். இதை யடுத்து, கனிமொழி, ரகுமான்கான் உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

சிந்தாதிரிப்பேட்டை அருணாச் சலம் தெருவில் உள்ள ரேஷன் கடை முன்பு சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், மண்ணடியில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, வில்லிவாக்கத்தில் உள்ள உணவு பங்கீட்டு அலுவலகம் முன்பு ரங்கநாதன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலையில் உள்ள ரேஷன் கடை முன்பு சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், அய்யப்பன்தாங்கல் ரேஷன் கடை முன்பு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 800-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சுமார் 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். சூரப்பட்டு, மண்ணடி, லாயிட்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் தங்கவைக்கப்பட்ட திமுகவினரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x