Last Updated : 14 Jun, 2015 09:55 AM

 

Published : 14 Jun 2015 09:55 AM
Last Updated : 14 Jun 2015 09:55 AM

‘மக்களின் நம்பிக்கையை அதிமுக அரசு இழந்துவருகிறது’: இந்திய கம்யூ. மாநில செயலாளர் இரா.முத்தரசன் கருத்து

மக்களின் நம்பிக்கையை அதிமுக அரசு இழந்துவருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்த போதிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் மட்டும் போட்டியிடுவது ஏன்?

இந்திய மக்கள் தேர்தல் ஜன நாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஆளுங்கட்சிக்கும், தேர்தல் ஆணை யத்துக்கும் உள்ளது. ஆனால், வெற்றியை மட்டும் இலக்காக கொண்டுள்ள அதிமுக, தேர்தல் களத்தில் அதிகார பலம், பண பலத்தை பயன்படுத்துகிறது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்க்கவும், ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக் கையை காப்பாற்றவும் நாங்கள் களமிறங்கியுள்ளோம்.

அதிமுகவுக்கு மிக நெருக்கமாக இருந்த இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிக்கு, தற்போது ஜெயலலிதாவையே எதிர்த்து போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதே?

கடந்த 2009-ம் ஆண்டு மக்கள வைத் தேர்தல், 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். ஆனால், 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர் தலிலேயே அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டோம், பிறகு மாநிலங் களவைத் தேர்தலில் உடன்பாடு ஏற்பட்டது. 2014 மக்களவைத் தேர்தலில் கூட்டணியை அதிமுகவே முறித்துக்கொண்டது. 2009 முதல் 2014 வரை அதிமுகவுடன் உறவும் இல்லை, முறிவும் இல்லை என்ற நிலையே இருந்தது. 2014 தேர்தலின்போது அது முற்றிலும் முறிந்துவிட்டது.

ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத் தின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்த இடைத்தேர்தல் திணிக் கப்பட்ட தேர்தல். பொறுப்புள்ள அரசியல் தலைவர் என்ற முறை யில் உச்ச நீதிமன்றத்தில் நிரபராதி என நிரூபிக்கும் வரை தேர்தலில் போட்டியிடுவதை ஜெயலலிதா தவிர்த்திருக்க வேண்டும். வாக் களிக்க பணம் கொடுப்பது, எதிர் தரப்பினரை மிரட்டுவது போன்ற செயல்களைத் தடுக்கவே தேர்தல் ஆணையம் விரும்புகிறது.

ஆனால், அவர்களிடம் அதற்கான அதிகாரம் இல்லை. குற்றம் உறுதியானால் வேட் பாளரை தேர்தல் களத்தில் இருந்து நீக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமாக நடக்கும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தொழிலாளர்கள் நிறைந்த வட சென்னை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு சொற்ப வாக்குகள்தானே கிடைத்தன. தொழிலாளர்களிடம் கம்யூனிஸ்ட்கள் செல்வாக்கை இழந்து விட்டார்களா?

ஒரு சில தேர்தல் முடிவுகளை வைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கை மதிப்பிடுவது சரியல்ல. 2014 தேர்தலில் கடைசி நேரத்தில் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை வைத்துதான் மக்கள் முடிவு எடுக்கின்றனர்.

இதனால் வாக்குகள் குறைந்திருக்கலாம். ஆனால், இந்த இடைத்தேர்தலில் அதிமுக இந்திய கம்யூனிஸ்ட் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. நிலைமை மாறும் என நினைக்கிறேன்.

திருமாவளவன் நடத்திய தமிழகத் தில் கூட்டணி ஆட்சி என்ற கருத் தரங்கில் கலந்துகொண்டீர்கள். இதை 3-வது அணிக்கான முயற்சி என்கிறார்களே?

இது திமுக, அதிமுகவுக்கு எதிரானதோ, 3-வது அணிக் கான முயற்சியோ அல்ல என திருமாவளவனே தெளிவுபடுத்தி யுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடக்காததால் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கொள்கை அளவில் கூட்டணி அமைந்தால் கூட்டணி ஆட்சி சாத்தியமே.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் யாருடன் கூட்டணி சேருவார்கள்?

தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே கூட்டணி குறித்து முடிவு எடுப்பது சாத்தியமற்றது. இதுகுறித்த விவாதத்தை இன்னும் நாங்கள் தொடங்கவே இல்லை.

1952 முதல் பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள், இப்போது ஒற்றை இலக்க தொகுதிகளுக்காக கூட்டணி சேரும் நிலை ஏற்பட் டுள்ளதே?

1952-ல் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு அமைவது ராஜாஜியின் சதியால் தடுத்து நிறுத்தப்பட்டது. மாநில கட்சிகளின் வளர்ச்சி, ஜாதி, மத ஆதிக்கத்தினால் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட் டிருக்கலாம். ஆனால், தற்போது கம்யூனிஸ்ட் கொள்கைகள் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படத் தொடங்கியுள்ளது.

அதிமுக அரசின் 4 ஆண்டு கால செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

தொடக்கத்தில் தேர்தல் வாக் குறுதிகளை நிறைவேற்றுவதில் அதிமுக அரசு சிறப்பாகவே செயல்பட்டது. ஆனால், தற்போது அரசின் செயல்பாடுகளில் பாராட் டும்படியான எந்த அம்சங்களும் இல்லை.

ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் முழுமையாக கிடைப்பதில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. பழிக்குப் பழி கொலை கள் அதிகரித்துள்ளன. மக்களின் நம்பிக்கையை இந்த அரசு கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது.

இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x