நீர்வழிப் பாதையில் கழிவுநீர் திறப்பு லாரி ஓட்டுநர் மீது மட்டும் நடவடிக்கை பாய்ந்தது: கடமை முடித்த குடிநீர் வாரியம்

நீர்வழிப் பாதையில் கழிவுநீர் திறப்பு லாரி ஓட்டுநர் மீது மட்டும் நடவடிக்கை பாய்ந்தது: கடமை முடித்த குடிநீர் வாரியம்
Updated on
1 min read

நீர்வழிப் பாதையில் கழிவுநீரை திறந்துவிட்ட விவகாரத்தில் லாரியின் தற்காலிக ஓட்டுநரை பணிநீக்கம் செய்ததோடு தனது நடவடிக்கையை குடிநீர் வாரியம் முடித்துக்கொண்டது.

புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் செல்லும் ஓட்டேரி நல்லா கால்வாயில் சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் லாரிகள், கழிவுநீரை திறந்துவிட்டு வருகின்றன. இது தொடர்பாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் கடந்த ஜூன் 12-ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. அது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் அனுப்பியுள்ள விளக்கக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

குடிநீர் வாரியத்தின் 6-வது பகுதி அலுவலகம், 72-வது வார்டு புளியந்தோப்பு திரு.வி.க.நகர் 2-வது தெருவில் பிரதான கழிவுநீர் குழாயில் அடைப்பு நீக்கும் பணிக்காக கழிவுநீர் உறிஞ்சும் லாரி அனுப்பப்பட்டது. அப்பணியின்போது, பிரதான குழாயிலிருந்து எடுக்கப்படும் கசடுகள் அருகில் உள்ள கழிவு நீரேற்றும் நிலையத்தில் திறந்துவிடாமல், கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாயில் விதிகளை மீறி திறந்துவிடப்பட்டுள்ளது. நீர்வழிப் பாதைகளில் கழிவுநீரை வெளியேற்றுதல் தடை செய்யப்பட்டதை தெரியப்படுத்தியும், அதை மீறி இத்தவறை செய்ததால், அந்த லாரியின் தற்காலிக ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அனைத்து லாரி ஓட்டுநர்களும் மீண்டும் இத்தவறு நடைபெறாமல் பார்த்துக்கொள்ளுமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு குடிநீர் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

பொதுமக்கள் அதிருப்தி

இந்த விவகாரத்தில், தவறு நடப்பது தெரிந்தும், தவறை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், வழக்கம் போல, தற்காலிக ஓட்டுநர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து, சென்னை குடிநீர் வாரியம் தனது கடமையை முடித்துக்கொண்டு இருப்பது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in