

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பெருந்துறை அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி போலீஸாரால் மதுரைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
மதுரை சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருபவர் நந்தினி (21). தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி, மதுரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் முன்பாக, இதே கோரிக்கையை வலியுறுத்தி, 24ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார். இதற்காக தனது தந்தை ஆனந்தனுடன், சென்னை வந்த நந்தினியை, குரோம்பேட்டை போலீசார் வழிமறித்து திருப்பி அனுப்பினர்.
இதன்பின், ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோவில் பகுதிக்கு தனது தந்தையுடன் புதன்கிழமை மாலை வந்த நந்தினி, அங்குள்ள டாஸ்மாக் கடை முன்பாக உண்ணாவிரதத்தை துவக்கினார். டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி, கோஷமிட்ட நந்தினி, இது தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர். கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால், அவர்களது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காலை ஈரோடு எஸ்.பி. பொன்னி, கூடுதல் எஸ்.பி., குணசேகரன், பெருந்துறை டி.எஸ்.பி., பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் இருவரையும் சந்தித்து பேசினர். அதன்பின், இருவரையும் வேன் மூலமாக, மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
கொடநாடு செல்ல திட்டம்:
சென்னையிலிருந்து முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்றுள்ள நிலையில், அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக, கொடநாடு சென்று உண்ணாவிரதம் இருக்க நந்தினி திட்டமிட்டதாக கூறப்படுகிறது. பெருந்துறையில் இருந்து நீலகிரி மாவட்டம் செல்லப் போவதாக போலீஸ் அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்த நிலையில், அவர்களை அமைதிப்படுத்தி மதுரைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.