

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தனக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்ற வாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் அனுப்பிய கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் தாமதம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களின் தூக்குத் தண்ட னையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக் குமார், ரவிச்சந்திரன் ஆகியோரும், முருகன் உள்ளிட்ட மூவரும் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, அவர்கள் அனைவரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. அதில், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் மீது மத்திய அரசின் சட்டங்களின் கீழ் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி கூறியதாவது: அரசமைப்புச் சட்டப் பிரிவு 162, 73 (1) ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகளை விடுவிப்பதற் கான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. 2008-ம் ஆண்டு இருந்த நிலைமை இப்போது இல்லை. இப்போது விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பாட்டில் இல்லை.
குற்றவாளிகள் 7 பேரும், மத்திய அரசின் தடா சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து இருந்து ஏற்கெனவே விடுவிக்கப் பட்டுள்ளனர். ஆயுதத் தடைச் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சட்டங்களின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளை அவர்கள் அனை வரும் அனுபவித்து விட்டனர்.
குற்றவாளிகள் அனைவரும் தமிழக அரசின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432 ன்படி அவர்கள் அனைவரையும் விடுவிக்கும் உரிமை தமிழக அரசுக்கு உள்ளது” என்றார். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து இன்றும் நடைபெறவுள்ளது.