Last Updated : 29 Oct, 2014 08:14 AM

 

Published : 29 Oct 2014 08:14 AM
Last Updated : 29 Oct 2014 08:14 AM

ஜனநாயகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீண்ட காலம் நீடிக்க அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து

ஜனநாயக நாட்டில் நீண்டகாலம் குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிப்பதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி முதல் டெல்லியில் துணை நிலை ஆளுநர் தலைமையிலான குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது. ‘சட்டசபையைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்’ என்று அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியிலிருந்த போது அளித்த பரிந்துரையை நிறைவேற்றாமல், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டதை எதிர்த்து அக்கட்சி வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் சலமேஸ்வர், ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், அருண் மிஸ்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல்

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா, ‘டெல்லியில் அதிக இடங்களைப் பிடித்த கட்சி என்ற முறையில், பாஜக-வை ஆட்சி அமைக்க அழைக்கலாமா? என்று கேட்டு துணைநிலை ஆளுநர் அனுப்பிய கடிதத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்’ என்று கூறினார்.

அதன் நகலையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். எனவே, டெல்லியில் அரசு அமைக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இரண்டரை மணி நேர வாதம்

ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘இந்த வழக்கு விசாரணை ஒவ்வொரு முறை வரும்போதும், மத்திய அரசு ஏதாவது சொல்லி இழுத்தடிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைப்பது மக்களின் அடிப்படை உரிமை. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. எல்லா கட்சிகளும் தங்கள் நிலையை தெரிவித்து விட்டன.

மேலும், கால அவகாசம் அளித்தால், அது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். குதிரை பேரத்தை தடுப்பது இந்த நீதிமன்றத்தின் கடமை. எனவே, சட்டசபையை கலைத்துவிட்டு உடனே தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார். தொடர்ந்து இரண்டரை மணி நேரம் அவர் வாதங்களை எடுத்து வைத்தார்.

அப்போது நீதிபதிகள், ‘டெல்லியில் அரசு அமைவது குறித்து மத்திய அரசு இவ்வளவு காலம் தாழ்த்துவது ஏன்? எட்டு மாதங்களுக்கு மேலாக இந்த நிலை நீடிக்கிறது. ஐந்து மாதங்களில் மத்திய அரசு தன் முடிவை அறிவித்திருக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு போதுமான அவகாசம் ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. ஜனநாயக நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்ந்து நீண்டகாலம் நீடிக்க அனுமதிக்க முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 30-ம் தேதி மீண்டும் நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x