

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களில், இளைஞர்களுடன் பொதுமக்களும் திரளாக பங்கேற்று வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, கோவையில் கொடிசியா மைதானத்தில் கடந்த 12-ம் தேதி சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து, கடந்த 17-ம் தேதி கோவை வ.உ.சி. பூங்காவில் 5 பேர் போராட்டத்தைத் தொடங்கினர். படிப்படியாக ஆதரவு பெருகி, 3-ம் நாளான நேற்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மைதானத்தில் தங்கி இருந்தவர்களுக்கு ஆதரவாக, அனைத்துப் பகுதிகளில் இருந்தும் கல்லூரி மாணவர்கள் குவியத் தொடங்கினர். அவிநாசி சாலையில் பேரணியாக நடந்து வந்து வ.உ.சி. பூங்காவை அடைந்தனர். வாயில் கருப்புத் துணிகளைக் கட்டிக்கொண்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதனிடையே மாணவர்களின் எழுச்சியைக் கேட்டறிந்த இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி, நடிகர்கள் மயில்சாமி, ரஞ்சித் ஆகியோர் போராட்டக் களத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். இதேபோல் வழக்கறிஞர்கள், வியாபார மற்றும் மருத்துவ அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.
அவிநாசி சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு, மற்றொரு வழித்தடம் போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், பூங்கா சுற்றுவட்டச் சாலை, எல்ஐசி சாலைகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
கட்டுப்பாடுடன்
மாணவர்கள், தங்களை கட்டுப்பாடோடு வழிநடத்திச் சென்றதோடு, அரசியல் கட்சி அடையாளங்களோடு வருபவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டது மக்களிடம் ஆதரவை அதிகப்படுத்தி உள்ளது.
போக்குவரத்தை சரி செய்யவும், பாதுகாப்புக்கும் 150 போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டனர்.
உதவிகள் கோடி
இதுதவிர, வெயிலால் மயக்கமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ முகாமை, மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி அமைத்திருந்தது.
மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல, 3 ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைத்திருந்தன தன்னார்வ அமைப்புகள். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் குழுவும், போராட்டக் குழுவினருக்கு சிகிச்சை அளித்து உதவினர்.
சுமார் 20-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் உணவு, தின்பண்டங்கள், குடிநீர் உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகளுக்கு வழங்கின.
போராட்டம் தொடரும்
ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக முதல்வர் - பிரதமர் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கைகளை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அதேசமயம், ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்படும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.
பொள்ளாச்சியில்
பொள்ளாச்சி - உடுமலை சாலையில் ஊர்வலமாக வந்த மாணவர்கள், மகாலிங்கபுரம் நுழைவுவாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி, ஜல்லிக்கட்டு காளை மற்றும் ரேக்ளா வண்டியை போராட்டக் களம் அருகே கொண்டு செல்ல போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.
நெகமம், வடசித்தூர் மேட்டுக்கடை, திருப்பூர் - பொள்ளாச்சி சாலையில் ஜக்கார்பாளையம், கப்பளாங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
திருப்பூரில்
திருப்பூர் மாநகராட்சி காந்தி சிலை, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த போராட்டங்களில் கல்லூரி மாணவியர் அதிக அளவில் பங்கேற்றனர்.
அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர் சங்கமும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டாரச் செயலாளர்கள் கனகராஜா, மணிகண்டபிரபு, வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தர்ணா
திருப்பூர் போயம்பாளையம் பிரிவு, வாவிபாளையம், பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் அமர்ந்து தர்ணா, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போயம்பாளையத்தில் நடந்த போராட்டத்தில், தமிழக இளைஞர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மாலை அணிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
போயம்பாளையத்தில் நடந்த போராட்டத்தில், தமிழக இளைஞர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மாலை அணிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் பேர் பங்கேற்றதாக போலீஸார் கூறினர்.
உதகையில்
உதகையை அடுத்த கேத்தியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று 2-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதகை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பார்மஸி கல்லூரி, ஃபிங்கர்போஸ்டில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரி மாணவிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கலைக் கல்லூரி, எமரால்டு ஹைட்ஸ் கல்லூரிகளுக்கு இரு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள்
நீலகிரி மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.