Published : 25 Oct 2014 08:18 AM
Last Updated : 25 Oct 2014 08:18 AM

சென்னையில் பரவுகிறது டெங்கு காய்ச்சல்: அரசு பொது மருத்துவமனையில் பெண்கள் உட்பட 10 பேர் அனுமதி - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 10 பேர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் ஏஜிப்டி வகை கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், தருமபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் மர்மக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். ஆனால் சுகாதாரத் துறையோ டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றே தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனை டவர் 1 கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள 122 மற்றும் 124 வார்டுகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மருத்து வமனை நிர்வாகத்திடம் கேட்டதற்கு, டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் யாரும் அனுமதிக்கப் படவில்லை என தெரிவித்தனர்.

தனி வார்டு இல்லை

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக் கப்பட்டனர். இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்து வமனை பின்புறம் மருந்தகம் அருகே மாடியில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது.

தற்போது அந்த வார்டு, தோல் நோய் சம்பந்தப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருபவர்கள், மற்ற நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவ வார்டுகளிலேயே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கு சிகிச்சை பெறும் மற்ற நோயாளிகள் தங்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவிவிடுமோ என்ற பீதியில் உள்ளனர். டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x