

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி சிலையை அகற்றுவது என்ற காவல் துறையின் முடிவு தனக்கு அதிர்ச்சியைத் தந்ததாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி சிலையை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அந்த சிலை சாலை போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது.
மேலும், விபத்துகள் நடப்பதால், அந்த சிலையை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டுமென காவல்துறை சார்பாக பதில் மனுதாக்கல் செய்திருப்பதாக வந்த செய்திகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
இதேபோல், பல்வேறு சிலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளின் நடுவில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை எல்லோரும் அறிவார்கள். சாலை நடுவில் சிலைகள் வைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் சில கருத்துக்களை சொன்னபோதும், அது தொடர்பாக சில வழிகாட்டு முறைகளை அரசு ஏற்படுத்தியிருந்தாலும், ஒரு இடத்தில் வைக்கப்பட்ட சிலையை அகற்றுவது என்பது சரியான முடிவாக இருக்காது.
இது தொடர்பாக வழக்கு, நீதிமன்றத்தில் இருப்பதால் நான் அதிகமாக கருத்து சொல்ல இயலவில்லை. இருப்பினும் காவல்துறையின் பதில் மனு, கவலை அளிப்பதாக உள்ளது.
இதுபோன்ற ஒரு நிலையை காவல்துறை எடுத்திருக்க கூடாது. இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறி, பதில் மனுவை மாற்றி தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்" என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.