

மேட்டூர் அருகே ஆத்மா குடியிருப்பதாகக் கூறி நெடுஞ்சாலை இடத்தில் ஆக்கிரமித்து குவித்து வைக்கப்பட்டிருந்த கற்குவியல் நேற்று அகற்றப்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அய்யம்புதூர் பகுதியில் மோகன் என்பவருக்குச் சொந்தமானத் தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்திற்கு அருகே நெடுஞ்சாலைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கு அதே ஊரைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், இறந்த முன்னோர்களின் ஆத்மாக்கள் என்று உருண்டை கற்களை, நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் போட்டு பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இவர்கள் சமூகத்தில் ஒவ்வொருவரும் இறக்கும் போது, அவர்களின் ஆத்மா உருண்டை கற்களில் குடியேறுவதாக நம்பி, அந்த கற்களை கொண்டு பூஜை செய்து வந்துள்ளனர்.
நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கற்களை அகற்றுமாறு மோகன், சம்பந்தப்பட்ட சமூகத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அகற்றவில்லை.
இதுசம்பந்தமாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் மோகன் முறையிட்டார். நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், ஆக்கிரமிப்பை அகற்றிட உத்தரவிட்டது.
இதையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்றனர். கற்களை அகற்றி எடுத்துச் செல்லுமாறு சம்பந்தப்பட்ட சமூகத்தினரிடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர்கள் ஆத்மா குடியேறியுள்ள கற்களை தாங்கள் அகற்றமாட்டோம், வேண்டுமெனில் நீங்களே அகற்றிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.
இதையடுத்து நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் இருந்த கற்குவியலை அதிகாரிகள் அகற்றினர். மேலும், இங்கு எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.