

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் உட்பட மொத்தம் 120 பிற்படுத்தப்பட்டோருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் சேரும் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய ஆட்சிப் பணி(IAS), இந்திய காவல்பணி(IPS) உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப்பணித் தேர்வுகளில் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் உட்பட மொத்தம் 120 பிற்படுத்தப்பட்டோருக்கு குடிமைப்பணிகளில் சேரும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் கல்வி - வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% என மொத்தம் 49.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு நிபந்தனையின்றி இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு (Non- Creamy Layer) மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.6 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுபவர்கள் வசதி படைத்தவர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. வழக்கமாக மத்திய அரசுப் பணிகளுக்காக விண்ணப்பிக்கும் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதற்கான சான்றை தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.
2015 ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வுகளில் பங்கேற்ற பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும் அவ்வாறே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற சான்று அளித்து தான் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் சான்றிதழ் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, அதன்பிறகு தான் தேர்வுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் வரையில் அவர்கள் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினராக கருதப்பட்டிருக்கின்றனர். நேர்காணலின் போதும் அவ்வாறே அவர்கள் பார்க்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், நேர்முகத் தேர்வுக்கு பின்னர் தரவரிசை வெளியிடுவதில் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களில் 120 பேர் மட்டும் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் தர வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டு எந்த பணியும் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 120 பேரும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று சான்றளிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சத்துக்கும் அதிகம் என்பதால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விளக்கத்தைக் கூட மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரபூர்வமற்ற முறையில் மட்டுமே இந்த விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்டோரில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்களின் குடும்ப வருமானம் ரூ.6 லட்சத்திற்குள் இருப்பதாக உறுதி செய்து தான் அவர்களுக்கு பிற பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழை தமிழக அரசு வழங்கியுள்ளது. மற்ற மாணவர்களுக்கும் அந்த அடிப்படையில் தான் சான்று வழங்கப்பட்டிருக்கிறது.
குடிமைப்பணித் தேர்வுகளின் ஒவ்வொரு கட்டத்திலும் அவற்றை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரிகள் சரிபார்த்து உறுதி செய்துள்ளனர். அத்தகைய சூழலில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் போது சம்பந்தப்பட்ட யாரிடமும் விசாரிக்காமல், அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் மிக அதிகமாக இருப்பதாகக் கூறி அவர்களை பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றியது மிகப் பெரிய சமூக அநீதியாகும். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.6 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பதாக எந்த அடிப்படையில் அந்த அதிகாரிகள் முடிவு செய்தார்கள்? அதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு யார் வழங்கியது? என்பன உள்ளிட்ட வினாக்கள் எழுகின்றன. ஆனால், அவற்றுக்கு அரசுத் தரப்பில் விடையளிக்கப்படவில்லை.
மத்திய அரசு வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், கடைநிலை ஊழியர்களைத் தவிர மற்ற நிலைப் பணிகளில் பணியாற்றும் பிற பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் விகிதம் இன்னும் 5 விழுக்காட்டை கூட தாண்டவில்லை. இதற்குக் காரணம் தகுதியானவர்களுக்கு எல்லாம் வசதிபடைத்தவர்கள்( Creamy Layer) என்ற முத்திரைக் குத்தப்பட்டு இட ஒதுக்கீடு பறிக்கப்படுவது தான்.
அதே அணுகுமுறையை பயன்படுத்தித் தான் குடிமைப் பணித் தேர்வுகளிலும் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. இது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகமாகும். இதேநிலை தொடர்ந்தால் இப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு குடிமைப் பணிகள் வெறும் கனவாக மாறிவிடும்.
எனவே, பாதிக்கப்பட்ட 120 பேரையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அவர்களின் தகுதிக்கேற்ப குடிமைப்பணி வழங்க வேண்டும்.
அதேபோல், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கான ஆயுதமாக வசதிபடைத்தவர்கள்( Creamy Layer) என்ற தகுதிநிலை பயன்படுத்தப் படுவதால், அதை நீக்க மத்திய அரசு உரிய சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.