

விவசாயிகளுக்கு ஆதரவாக தமி ழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், ரயில், சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராடி வரு கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 3-ம் தேதி தமிழகம் முழு வதும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டி யக்கம் அழைப்பு விடுத்திருந்தது. பாஜக தவிர அனைத்து கட்சி களும், விவசாய சங்கங்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கூட்டியகத்தின் தலைவர் பி.கே.தெய்வசிகாமணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் பாதிப்பு இல்லை
விவசாயிகளின் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடைகளை அடைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், விவ சாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கடையடைப்பு வேண்டாம் என அறிவித்திருந்தார். இதனால் ஒருசில இடங்களைத் தவிர பெரும் பாலான கடைகள் திறந்திருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மாணவர்கள் போராட்டம்
சென்னை அண்ணா சாலை சிம்சன் பெரியார் சிலை முன்பு அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தின் மாநில செயலாளர் தினேஷ் தலைமையில் போராட் டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பல்கலைக்கழகம் முன்பும் மாண வர்கள் போராட்டம் நடத்தினர். மாநிலக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலை மறிக்க முயன்ற டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புரசைவாக்கத்தில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் நேற்று 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில், அருள் செல்வன் என்ற மாணவர் மயங்கி விழுந்தார். ஷெனாய் நகரில் பால் முகவர்கள் உண்ணா விரதம் இருந்தனர். கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் உண்ணாவிரதம்
விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து உள் ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை சூலூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், விவசாய சங்கங்களின் கூட்டியக்கம், காங்கிரஸ், கொங்கு நாடு ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சி, அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.
தஞ்சையில் ரயில் மறியல்
கையில் துடைப்பங்களுடன் தஞ்சையில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தின் துணைத் தலைவர் சுகுமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7-வது நாளாக காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிக ளுடன் இணைந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று போராட்டம் நடத்தினார்.
திருநெல்வேலியில் மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களில் விவசாயி களுக்கு ஆதரவாக 95 சதவீதத் துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக் கப்பட்டிருந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடை பெறவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் சத்திய மங்கலம், அரச்சலூர், சிவகிரி உள்ளிட்ட இடங்களில் விவசாயி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, சாமல்பட்டியில் நடை பெற்ற உண்ணாவிரதப் போராட் டத்தில் 300 பேர் பங்கேற்றனர். தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்துக்கு அவ்வளவாக ஆதரவில்லை.