

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், மீன்வளர்ப்பியல் பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு அக்டோபர் 13 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. உயர்கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர் முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் உதவி பேராசிரியர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
இந்த முறையில், கணிதம், இயற்பியல் உட்பட 5 பாடங்களுக்கு உதவி பேராசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு தேர்வுபட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், மீன்வளர்ப்பியல் ஆகிய பாடங்களில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேர்முகத்தேர்வு அக்டோபர் 13-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான அழைப்புக்கடிதம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் விரைவில் அனுப்பப்படும்.
அழைப்புக்கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) அழைப்புக்கடிதத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட நாளில் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.