Published : 11 Aug 2016 08:48 AM
Last Updated : 11 Aug 2016 08:48 AM

தருமபுரி உட்பட 4 மாவட்டங்களில் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்கள்: அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ரூ.73 லட்சம் செலவில் புதிதாக 4 சிறப்பு தத்தெடுப்பு நிறு வனங்கள் அமைக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா அறிவித்தார்.

சட்டப்பேரவையில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் 11 மாவட்டங்களில் தத்தெடுத்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை, சேலம், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 2 நிறுவனங்களும், கோவை, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் தலா ஒரு நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் பெறப்படும் குழந்தை களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக முதல்வரின் உத்தரவுப்படி தருமபுரி, கடலூர், நாமக்கல், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.73 லட்சத்து 10 ஆயிரம் செலவில் 4 புதிய சிறப்புத் தத்தெடுப்பு நிறுவனங்கள் தொடங்கப்படும்.

பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப் படும் குழந்தைகளை தங்க வைத்து, அவர்களுக்கான பராமரிப்பு, கல்வி, பயிற்சி, சிகிச்சை உள்ளிட்ட மறுவாழ்வு அம்சங்களை வழங்குவதற்கான வரவேற்பு இல்லம், சென்னை ராயபுரத்தில் இயங்கி வருகிறது. இந்த இல்லத்துக்கு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் ரூ.1 கோடி செலவில் கட்டப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x