பிரசவத்துக்காக காடு, மலை, ஆறுகளைக் கடந்து தூக்கி வரப்பட்ட தாய், சேய் பரிதாபமாக உயிரிழப்பு: 13 கி.மீ. பயணித்தும் பலனில்லாததால் சோகத்தில் மூழ்கிய பழங்குடிகள்
பிரசவத்துக்காக காடு, மலை, ஆறுகளைக் கடந்து சுமார் 13 கி.மீட்டர் தூரம் தூக்கி வரப்பட்ட கர்ப்பிணி, அழகிய ஆண் குழந் தையைப் பெற்றெடுத்த சில மணி நேரத்தில், இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மலைப் பிரதேசமாகவும், மாநில எல்லை யாகவும் இருப்பது வால்பாறை. இதனை ஒட்டியுள்ள கேரள மாநிலப் பகுதியானது அடர்ந்த வனத்தை யும், ஆங்காங்கே எஸ்டேட்டு களையும் கொண்டது. இதில் ஒன்று, இடைமலைக்குடி வனப் பகுதி. மூணாறுக்கும், வால் பாறைக்கும் இடையே உள்ள இடைமலைக்குடி வனப் பகுதியில் சுமார் 26-க்கும் மேற்பட்ட பழங் குடி கிராமங்கள் உள்ளன. அடிப் படைத் தேவைகளுக்குக் கூட பல மைல் தூரம் வனத்தைக் கடந்து வால்பாறைக்கு வரவேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் நிலை.
இடைமலைக்குடியை ஒட்டி யுள்ளது நூறாடிகுடி பழங்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மனைவி அஞ்சலம்மாள்(23). கர்ப்பம் தரித்திருந்ததால் வால்பாறையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தில் சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
வாகனங்கள் வர முடியாது
கடந்த 18-ம் தேதி காலை அஞ்சலம்மாளுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத் துவமனைக்கு கொண்டு சென்றே ஆக வேண்டும் என்ற சூழல் ஏற் பட்டதால், வேறு வழியின்றி கிராம மக்கள் அவரை தூக்கிக் கொண்டு வால்பாறைக்கு புறப்பட்டனர். வாகனங்கள் வர முடியாத சோலைக்காடு என்பதால் சுமார் 13 கி.மீட்டர் தூரம் நடந்தே வந்தனர். இடைமலையாறு உள்ளிட்ட 2 பெரிய ஆறுகளைக் கடந்து ஒருவழியாக பிற்பகல் ரயான் டிவிசனை அடைந்துள்ளனர்.
அதன்பிறகு ஆம்புலன்ஸை வரவழைத்து வால்பாறை வந்த னர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நிலைமை மோச மானதை அடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 18-ம் தேதி நள்ளிரவு பொள்ளாச்சி அரசு மருத் துவமனையில் அஞ்சலம்மாள், ஆண் குழந்தையை பெற்றெடுத் தார். இதனால் உடன் வந்த பழங் குடி மக்கள் அனைவருமே மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் இந்த மகிழ்ச்சி சிறிது நேரமே நீடித்தது. நேற்று முன் தினம் அதிகாலை குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் அஞ்லசம் மாளுக்கு அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தாய் இறந்த சில மணி நேரத்திலேயே குழந்தையின் உடல்நலமும் மோசமானது.
குழந்தையையாவது காப் பாற்றலாம் என ஆம்புலன்ஸில் குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவர்கள் கோவைக்கு விரைந்தனர். ஆனால் பாதி வழியி லேயே குழந்தையும் உயிரிழந்தது. தாயையும், சேயையும் காப்பாற்றி விடலாம் என நினைத்து காடு, மலை, ஆறுகளைத் தாண்டி கர்ப்பிணியைத் தூக்கி வந்த பழங்குடி மக்களுக்கு இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சலம்மாளின் சகோதரர் ராஜு கூறும்போது, ‘முன்கூட்டியே வந்து தங்கியிருந்தால் இந்த பிரச் சினை இருந்திருக்காது. எதிர் பாராதவிதமாக நாங்கள் பயணப் பட்டபோது மழையும் பெய்தது. அதனிடையே ஆறுகளைக் கடந்து நடந்து வருவது சிரமமாகிவிட்டது’ என்றார்.
ரயான் டிவிசன் பகுதி மக்களிடம் கேட்டபோது, ‘சின்கோனாவிலும் மருத்துவமனை இருக்கிறது. வால் பாறையிலும் உள்ளது. ஆனால் போதுமான வசதிகள் இல்லை. தமிழக - கேரள மலைவாழ் மக்கள் நலன் கருதி, இனியாவது மருத் துவ வசதிகளை மேம்படுத்த வேண் டும். ரயான் டிவிசன் வரையாவது சாலையை சீரமைக்க வேண்டும். சாலை, மருத்துவமனை வசதிகள் ஆகியவை சரியாக இல்லாததே இந்த உயிரிழப்புகளுக்கு கார ணம்’ என்றனர்.
