Published : 05 Feb 2017 10:22 AM
Last Updated : 05 Feb 2017 10:22 AM

தமிழகம் முழுவதும் பிப்.7-ல் மறியல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

சென்னையில் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் நேற்று கூறியதாவது:

தமிழகம் கடும் வறட்சியால் வாடுகிறது. விவசாயம் பொய்த்துவிட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறக்குமாறு உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. இதுவும் பாதிப்பை அதிகப்படுத்திவிட்டது. தற்கொலை, அதிர்ச்சியால் இறந்த விவசாயிகள் எண்ணிக்கை 150-ஐ கடந்துவிட்டது. அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரணமும் மிகவும் குறைவாக உள்ளது.

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவி மக்கள், மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். சொத்துகள் சேதமடைந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும். குற்றம் இழைத்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் 97 சதவீத பழைய நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்துவிட்ட நிலையில் கறுப்புப் பணம் எவ்வளவு கிடைத்தது என்பதற்கு பதில் சொல்ல முடியாமல் மத்திய அரசு உள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி நேர்முக வரி குறைக்கப்பட்டு, மறைமுக வரி ரூ.75 ஆயிரம் கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வரும் 7-ம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x