Published : 04 Oct 2014 11:50 am

Updated : 04 Oct 2014 11:50 am

 

Published : 04 Oct 2014 11:50 AM
Last Updated : 04 Oct 2014 11:50 AM

கனவு இல்லம்: தவறான நம்பிக்கைகள்

ஒருவர் தன் வாழ்நாள் உழைப்பைக் கொண்டு தன் கனவு இல்லத்தை உருவாக்க நினைக்கிறார். அந்த அனுபவம் சுகமானது;

சற்று சுமையானதும் கூட! சொந்த வீடு கட்டும்போது எதிலும் குறை ஏற்பட்டு விடக் கூடாது என்று ஆசை ஆசையாய் பலரையும் விசாரித்து வீட்டைக் கட்டி முடிக்கின்றனர்.


ஆனால், இப்படிப் பலரையும் விசாரித்துப் பார்த்துப் பார்த்துக் கட்டும் வீடுகளிலும் அதன் உண்மையான மதிப்பு பல சமயம் வெளிப்படுவதில்லை. அதற்கான பல காரணங்களில் ஒன்று சரியான வழிகாட்டுதல் இல்லாமை.

நம் நாட்டில், குறிப்பாக, சிறு நகரங்களில் மூன்று தவறான புரிதல்கள் உருவாகி இருக்கின்றன. அவை பெரும்பாலும், சிறியதும் பெரியதுமாகத் தனி வீடுகள் கட்டும் நடுத்தரக் குடும்பங்களைப் பரவலாகப் பாதிக்கின்றன. அவர்களின் உழைப்புக்கு முழு பலன் கிடைக்கத் தடையாக உள்ளன.

நல்ல, தரமான சிமெண்ட் மற்றும் கம்பிகள் மட்டுமே ஒரு சிறந்த பாதுகாப்பான கட்டிடத்தை உருவாக்கி விடும்.தரமான பொருட்களைப் பயன்படுத்துவது சரியானது தான். இதை மறுக்க முடியாது. ஆனால் அது மட்டுமே உங்கள் வீட்டைச் சிறந்ததாக்கப் போவதில்லை.

கட்டிடக் கலையும் சமையற் கலையைப் போலத்தான். அடுப்படியில், இரண்டாம் தர பொருட்களைக் கொண்டு கூட ஒரு நல்ல சமையல் கலைஞரால் அருமையாகச் சமைத்துவிட முடியும். அங்கே அதிமுக்கியமானது, பொருட்களை எப்படிப் பயன் படுத்துகிறோம் என்பதுதான். அது போலவே வீட்டில் கட்டுமான முறை என்பது முக்கியமானது. கண்டிப்பாகச் சரியானதாக இருக்கவேண்டும்..

இதற்கு பிரபலமான ஓர் உதாரணமாக இரும்புக் கம்பிகள்தான் கான்கிரீட் கட்டிடங்களின் முதுகெலும்பாக வர்ணிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட முதுகெலும்பு சரியாக இருந்தால்தானே கட்டிடத்திற்கு உறுதி. இருக்க வேண்டிய இடத்தில் அவை துல்லியமாக இருக்க வேண்டும். நன்கு கற்ற பொறியாளரின் கவனிப்பு இல்லாவிட்டால் தவறுகள் நடக்கப் பெரிதும் வாய்ப்புள்ளது. இதில் உள்ள பெரும் சிக்கலே தவறுகளைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாதுதான்.

குறைகள் எப்போது தெரியும்?

கடும் மழை, இடி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் வரும்போதுதான் கட்டிடங்களின் பலவீனங்கள் தெரிய வரும். ஆனால் இம்மாதிரி இயற்கைச் சீற்றங்களை யாரால் வெல்ல முடியும் எனக் கேள்வி எழும். உண்மைதான் சுனாமி போன்ற பெரும் இயற்கைச் சீரழிவுகளை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் பூகம்ப இடிபாடுகளால் ஏற்படும் உயிர்ச் சேதம் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. அது பொறியியலின் சாதனை. அங்கே பொறியாளர்களை மக்கள் நம்புகிறார்கள். பொறியாளர்களும் மக்கள் நம்பும் படி நடந்து கொள்கிறார்கள்.

இனிமேல் தேவை இல்லாமல் அதிக விலை கொடுத்துப் பொருட்களை வாங்கும் முன் சிந்திப்போம். திறன் பெற்றவர்களைகத் துணை கொள்வோம். இந்தியாவில் ஒவ்வொரு பொறியாளரும் தனது வாழ்வில் எதிர்கொள்ளும் சங்கடம் இதுதான். முறையாகக் கையாளாவிடின் இது அவமானத்தைக் கொடுக்கக்கூடியது.

நான் பொறியியல் மாணவ னாய் இருந்த காலம் தொட்டு என்னிடம் என் சொந்த பந்தங்கள், குடும்ப நண்பர்கள் கேட்பவை இரண்டு தான்: 1. எந்த சிமெண்ட் சிறந்தது? 2. வீடு கட்டுகிறேன்; ஒரு ப்ளான் போட்டுக்கொடு. முதல் கேள்விக்கு என் பதில், “கிட்ட தட்ட- எல்லாமே!” ஆம், இந்தியாவில் உள்ள முன்னணி சிமெண்ட்டுகள் அனைத்தும் தரமானவைதான் (கம்பிகளுக்கு இது பொருந்துமா என்பது சந்தேகம்). நாம் பரவலாக வீடுகளுக்குப் பயன்படுத்தும் M20 (அ) M30 கான்கிரீட்டை அனைத்து முன்னணி சிமெண்ட்டுகளைக் கொண்டும் சுலபமாக உருவாக்க முடியும்.

அதற்கான சூட்சமம், தண்ணீர் உபயோகத்தை முடிந்தவரை குறைப்பதிலும் (Optimum w/c ratio), சரியான விதத்தில் & விகிதத்தில் (Uniform Grading of Aggregates) உட்பொருட்களைச் சேர்ப்பதிலும் உள்ளது.

இரண்டாவது கேள்விக்கு பதில், “எனக்குத் தெரியாது!”. உண்மையில் எந்தப் பொறியாளரும் அதற்குப் படிப்பதில்லை. அனுபவத்தைக்கொண்டு வேண்டுமானால் எதாவது செய்யலாம். இதற்கென முறையாகப் படித்தவர் ஆர்கிடெக்ட் (Architect) ஆவார். அவர் படித்திருப்பது ஒரு நவீன வாஸ்து சாஸ்திரம். ஒரு Civil Engineer செய்ய வேண்டியது Architect கொடுக்கும் plan-க்கு உயிர் கொடுப்பதுதான்.

இங்கே கண்முன் நடப்பது ஏமாற்று வேலை. பொறியாளர், Architect-ன் வேலையைச் செய்கிறார். பொறியாளரின் வேலையை ஒரு கொத்தனார் செய்கிறார். இறுதியில் பலவும் சிறப்பாக அமைவதில்லை. நாமும் சொல்லிவிடுறோம் “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது”.

கட்டிடங்களுக்கெனத் தரக் கோட்பாடுகள் நம் நாட்டில் இல்லை. கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மனோபாவம் மேலோங்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள சட்ட திட்டங்கள் கட்டிட அனுமதி அளிப்பதற்கு மட்டுமே அல்ல. ஒவ்வொரு கட்டிடமும் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் (Bureau of Indian Standards - BIS) அவ்வப்போது வெளியிடப்படும் கோட்பாடுகளுக்கு ஏற்ப முறையாகக் கட்டப்பட வேண்டும். BIS முத்திரை நீங்கள் வாங்கும் தங்கத்துக்கு மட்டும் அல்ல, உங்கள் கனவு இல்லத்துக்கும் கண்டிப்பாகத் தேவை.

ஒவ்வொரு கோட்பாட்டுக் கோர்வைகளும் ஒரு தர எண் கொண்டு அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கான்கிரீட் கட்டிடம் IS 456-ன் படி இருக்க வேண்டும். இரும்பு கட்டமைப்புகள் IS 800-ன் படி இருக்க வேண்டும். இந்தப் பட்டியல் நீளமானது, உலகத் தரத்திலானது. அறிவு நமக்கும் நமது வீட்டிற்கும் அழகு தரும்.

கட்டுரையாளர்,
ஐஐடியில் முதுகலைப் பட்டம் பெற்ற பொறியாளர்
தொடர்புக்கு: deepan.shanmugasundaram@gmail.com

வீட்டு மனைகனவு இல்லம்நம்பிக்கைBIS முத்திரைஆர்கிடெக்ட்Civil Engineerகட்டுமானப் பொருள்கள்

You May Like

More From This Category

More From this Author