

பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நீதிமன்றம்தான் உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அரசு நிலங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவைச் சேர்ந்த பி.ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பொன்னேரி தாலுகாவில் உள்ள பெரியகாவனத்தில் ஓடும் ஆற்றங்கரை பகுதியில் பர்மா அகதிகள் வீடு கட்டிக்கொள்ள 13.75 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் விவசாயப் பயன்பாட்டில் உள்ள இந்த இடத்தில் குடியிருப்புக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பர்மா அகதிகள் யாரும் இங்கு குடியிருக்க முன்வரவில்லை.
இந்நிலையில் சில சமூக விரோதிகள் நேதாஜி பர்மா அகதிகள் நலச்சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, ‘‘இந்த இடத்தில் உண்மையான ஒதுக்கீடுதாரர்கள் இருக்கிறார்களா?, வேறுயாரும் மூன்றாவது நபர்கள் சட்டவிரோத மாக ஆக்கிரமித்துள்ளார்களா? என்பதை ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் 2 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை மீண்டும் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது அரசு சார்பில், “அந்த இடத்தில் ஒரு சில ஒதுக்கீடுதாரர்களே வீடுகள் கட்டியுள்ளனர். வேறு சில காரணங்களால் சட்டப் பிரச்சினையும் உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் தங்களது உத்தரவில், ‘‘அங்கு ஆக்கிரமிப்பு உள்ளது என்பதை அதிகாரிகளே சுட்டிக்காட்டி உள்ளனர். இது போன்ற நிர்வாக ரீதியான பிரச்சினைகளை எல்லாம் மாவட்ட ஆட்சியர்கள்தான் கவனிக்க வேண்டும். அதை விடுத்து, பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நீதிமன்றம்தான் உத்தரவிட வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. நிர்வாக ரீதியி லான நடவடிக்கை கடுமை யாக இருந்தாலே, பொது இடங்களை ஆக்கிர மிப்புகளில் இருந்து மீட்டு விடலாம், அரசுக்குச் சொந்த மான பொது இடங்கள் சூறையாடப்படுவதை தடுப்ப தும், அதை பாதுகாக்க வேண் டியதும் மாவட்ட ஆட்சியர் களின் கடமை. தலைமைச் செயலாளரும் கவனம் செலுத்தி மாவட்ட அள வில் கண்காணித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தர விட்டனர்.