Last Updated : 04 Jun, 2016 11:37 AM

 

Published : 04 Jun 2016 11:37 AM
Last Updated : 04 Jun 2016 11:37 AM

உடுமலை அரசுக் கல்லூரியை உயர் கல்விக்காக நாடும் மாணவர்கள்: குறைந்த இடங்களே இருப்பதால் ஏமாற்றம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 742 இடங்களுக்கு 2,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது அரசு கலைக் கல்லூரி. 1971-ல் தொடங்கப்பட்ட இக்கல்லூரி 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

உடுமலை நகர், சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள், பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இக்கல்லூரியில் அதிகம் பயின்று வருகின்றனர்.

பொள்ளாச்சி, தாராபுரம், பழநி ஆகிய ஊர்களில் அரசு கலைக் கல்லூரி இல்லாததால் இப்பகுதிகளில் இருந்தும் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கைக்காக வருவது வழக்கமாக உள்ளது.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளாதாரம், இயற்பியல், வேதியல், புள்ளியியல், கணிதம், கணினி அறிவியல், தாவரவியல் ஆகிய 12 துறைகளில் இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. கலைப் பாடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 60 பேர், அறிவியல் பிரிவுக்கு 50 பேர், கணினி அறிவியல் பிரிவுக்கு 80 பேர் (2 ஷிப்ட்) உட்பட 12 துறைகளுக்கும் சேர்த்து ஆண்டுக்கு 742 மாணவ, மாணவியர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்தாண்டு சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களைச் பெற்றுச் சென்றனர். சுமார் 2,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத கல்லூரி துறைத் தலைவர் ஒருவர் கூறியதாவது: யுசிஜியின் விதிகளில் கல்லூரி நிர்வாகம் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. கூடுதல் சேர்க்கை குறித்து அறிவித்தாலும், அதற்கான கட்டமைப்புகள் வேண்டும்.

கூடுதல் கட்டடங்கள், வகுப்பறைகள், ஆசிரியர்கள் என பல்வேறு முக்கிய அம்சங்களை ஏற்படுத்த வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், உடுமலையைத் தவிர்த்து நெடுந்தொலையில் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர்.

அதனால், பொள்ளாச்சி, தாராபுரம், பழநி ஆகிய இடங்களில் அரசு கலைக் கல்லூரி தொடங்கினால், உடுமலையைத் தேடி வரும் மாணவர்கள் மட்டுமின்றி, அதிக கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளை நாடும் நிலையும் இருக்காது என்றார்.

இந்த ஆண்டு சேர்க்கைக்காக மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தர வரிசைப் பட்டியல், கல்லூரி வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x