

சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான வழக்கில் சிபிஐ, வருவாய் குற்றப்புலனாய்வுத் துறையை எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் புதிய பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி அரசு கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத் தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந் துள்ளார். இது ஜூலை 11-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க குதிரை பேரம் நடந்ததாக தனியார் டிவி ஒன்று அதிமுக எம்எல்ஏ ஒருவரது பேட்டியை ஒளிபரப்பியது. இதுதொடர்பாக சிபிஐ, வருவாய் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநரகம் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு உயர் நீதி மன்றத்தில் ஸ்டாலின் கூடுதல் மனு தாக்கல் செய்தார்.
‘நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது பேரவையின் உரிமைப் பிரச்சினை. எனவே, அதுகுறித்து விசாரிக்க சிபிஐ, வருவாய் புலனாய்வுத் துறைக்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்த கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது’ என முதல்வர் பழனிசாமி, சட்டப் பேரவைச் செயலாளர் பூபதி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
பேரவைக்கு வெளியில் நடந்த நிகழ்வுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று முதல்வர், பேரவைச் செயலாளர் கூறுவதை ஏற்க முடியாது. நம்பிக்கை வாக் கெடுப்புக்காக கோடிக்கணக்கில் பணம், தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பேரவைத் தலைவருக்கு தமிழக ஆளுநரும் அறிவுறுத்தியுள்ளார். அதன் பிறகும் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் இருந்தே அவரிடம் தவறு இருப்பது தெளிவாகிறது.
அதிமுக எம்எல்ஏக்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்தும், லஞ்சம் கொடுத்தும்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது என நான் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த பிரதான வழக்குக்கு வலுசேர்க்கும் வகை யில், சமீபத்தில் ஆங்கில தொலைக் காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. எனவே இந்த கூடுதல் மனு என்பது பிரதான வழக்கை முழுக்க முழுக்க சார்ந்துள்ளது.
மேலும், அதிமுக எம்எல்ஏக் களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.10 கோடி வரை லஞ்ச பேரம் நடந்து, தங்கமும் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக எம்எல்ஏ சரவணன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தப் புதிய சாட்சி யத்தை ஆய்வு செய்து நீதிமன்றம் அவற்றை எனது பிரதான வழக்கில் முக்கிய ஆவணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்புக்காக ஊழல், வரி ஏய்ப்பு போன்றவையும் நடந்துள்ள தால், நீதியை நிலைநாட்ட சிபிஐ, வருவாய் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடுவது அவசியமானது. அவர்கள் விசாரித் தால் மட்டுமே இன்னும் பல குட்டுகள் வெளியே வரும். எனவே அவர்களையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.