Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

33 டிஎஸ்பி பதவி உள்பட 130 பணியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு ஏற்பாடுகள் தயார்

காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கான 33 இடங்கள் உள்பட 130 காலியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. இதற்கிடையே, வயது வரம்புச் சலுகை தொடர்பான அரசின் முடிவை டி.என்.பி.எஸ்.சி. எதிர்நோக்கி காத்திருக்கிறது.

குரூப்-1 தேர்வு

கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.), காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் உள்ளிட்ட உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தேர்வை நடத்துகிறது.

குரூப்-1 தேர்வு மூலம் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு இருப்பதால் இந்த தேர்வுக்கு கடும் போட்டி இருக்கும். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் என 3 நிலைகளைக் கொண்ட குரூப்-1 தேர்வு, அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வைப் போல தமிழக அளவில் உயரிய தேர்வாக கருதப்படுகிறது.

தேர்வு ஏற்பாடுகள் தயார்

இந்த தேர்வை எழுத குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30. எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வயது வரம்பை மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல 45 ஆக உயர்த்த வேண்டும் என்று இளைஞர்கள் தொடர்ந்து வேண்டுகோள்விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், 2012-2013-ம் ஆண்டுக்கான 130 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த தேர்வின் மூலமாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவியில் 33 இடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் முடிவை எதிர்பார்த்து...

இதற்கிடையே, ஐ.ஏ.எஸ். தேர்வைப் போன்று குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படாததாலும், தேர்வு பற்றிய விழிப்புணர்வு கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் தாமதமாக ஏற்படுவதால் குஜராத், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைப் போன்று வயது வரம்பை 45 ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு இளைஞர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பிரிவினர் உள்பட அனைவருக்கும் 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டது. ஒருமுறை அளிக்கப்பட்ட அந்த வயதுச் சலுகை முடிந்துவிட்ட நிலையில், தற்போது முன்பிருந்த பழைய வயது வரம்புதான் இருந்து வருகிறது. மாணவர்களின் தொடர் கோரிக்கையை அரசும் தீவிரமாக பரிசீலித்து வருவதாக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. காத்திருப்பு

130 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த வாரமே வெளியிடுவதாக இருந்தது. ஆனால், வயது வரம்பு சலுகை தொடர்பான அரசின் முடிவு வெளியிடப்படும் சூழலை கருத்தில் கொண்டு குருப்-1 தேர்வு அறிவிப்பை தள்ளிவைத்தது.

இதைத் தொடர்ந்து, தோட்டக்கலை அதிகாரி தேர்வு, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தேர்வு அறிவிப்புகளை கடந்த சில நாட்களுக்கு அடுத்தடுத்து வெளியிட்டது. வயது வரம்பு தளர்வு குறித்த அரசின் முடிவை டி.என்.பி.எஸ்.சி. மட்டுமின்றி குரூப்-1 தேர்வை எதிர்பார்த்து இரவு பகலாக படித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி யுள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x