

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஆகிய ஏரிகளுக்கு சுமார் 72 நாட்களுக்கு பிறகு நீர் வரத்து தொடங்கியுள்ளது.
வடசென்னை மற்றும் திருவள் ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால், செங்குன்றம் ஏரிக்கு, 72 நாட்களுக்கு பிறகு கடந்த திங்கள்கிழமையன்று விநாடிக்கு 11 கனஅடி நீர் வரத்து தொடங்கி யுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் விநாடிக்கு 217 கனஅடி நீர் வரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த திங்கள்கிழமை 38 மில்லியன் கன அடியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு, நேற்றைய நிலவரப்படி 53 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது.
ஏரிக்கு நீர் வரத்து தொடங்கி யிருப்பது, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மத்தியில் இந்த கோடையை சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “மழை காரணமாக தற்போது ஏரிக்கு நீர் வரத் தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் நல்ல மழை பெய்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார்.