

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி உட்பட ரூ.11 கோடியே 89 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.11 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் கட்டிடம், மகளிர் தங்கும் விடுதி, நூலக கட்டிடம், மாணவர் தங்கும் விடுதி மற்றும் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் இரவு விடுதி ஆகியவற்றின் திறப்பு விழா மருத்துவமனையில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மீன்வளத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் அனைத்துக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார். இந்த விழாவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மருத்துவக் கல்லூரி இயக்குநர் நாராயணபாபு, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சிவாயம், ஆர்எம்ஓ ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவின் முடிவில் அமைச்சர் டி.ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வருமானவரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட ஆவணங்கள் போலியானவை” என்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுகவினர் ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளனரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அரசு விழாவில் அரசியல் தொடர்பான கேள்விக்கு பதில் அளிப்பது சரியாக இருக்காது” என்றார்.