Published : 10 Oct 2014 08:30 AM
Last Updated : 10 Oct 2014 08:30 AM

அரசியலுக்கு வர மாட்டார் ரஜினி: இல.கணேசன் பரபரப்பு பேட்டி

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் எனக்கூறி அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த முயற்சி நடக்கிறது. ஆனால் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ரஜினி ஒரு தேசியவாதி. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களிடம் அவர் நல்ல மரியாதை கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் எனக்கூறி அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த முயற்சி நடக்கிறது. அவர் அரசியலுக்கு வருவதாக இல்லை. இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர மோடி இருவகைகளில் தனித்தன்மை பெற்றவராக இருக்கிறார். உலக நாடுகளிடையே இந்தியாவின் மரியாதையை மீட்டுத் தந்துள்ளார். அடுத்ததாக, மக்களுக்கு நேரடியாக கருத்துகளை தெரிவிக்கக் கூடியவராக இருக்கிறார்.

ஜெயலலிதா மீதான தீர்ப்பு..

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையைப் பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர் யார் என்று பார்த்து தீர்ப்பு வழங்கவில்லை. குற்றத்தின் தன்மையைப் பார்த்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தன்னை நிரபராதி என்று நிரூபிக்க 18 ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை ஊழலுக்கு எதிரான தண்டனை. 18 ஆண்டுகள் இந்த வழக்கு நீடித்ததால் குற்றத் தின் தன்மை தற்போதைய சமுதாயத்துக்கு மறந்துவிட்டது. இதில் மேல்முறையீடு செய்து அவர் தீர்வை பெறலாம். இந்த தீர்ப்பை கண்டிக்கும் வகையில் அதிமுகவினர் நடத்திய தொடர் போராட்டங்களால், ஜெயலலிதா கைதானபோது இருந்த அனுதாபம் முற்றிலுமாக போய்விட்டது.

மாற்றம் ஏற்பட்டால்…

இந்த தீர்ப்பை விமர்சிப்பதை விடுத்து, நீதிபதியை விமர்சிக்க அவர்களுக்கு உரிமையில்லை. அவ்வாறு விமர்சித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த ஊழல் வழக்கு நடந்த 18 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போது, தன் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்ற எண்ணத்தில் ஆட்சி நடந்ததா? இனியாவது அதை உணர்ந்து ஒரு மாற்றம் ஏற்பட்டால் அதுதான் தக்க பரிகாரமாக இருக்கும்.

இந்த தீர்ப்பால் தமிழக அரசியலில் ஒரு சூன்யம் ஏற்பட்டுள்ளதாக நான் கருதவில்லை. தற்போது ரூ.60 கோடி பெரியதா அல்லது 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி பெரியதா என்றுதான் மக்கள் பேசிக் கொள்கின்றனர். இதன்பின், அதிமுக எப்படி நடந்து கொள்கிறது என்பதை பொறுத்து அதன் எதிர்காலம் அமையும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்கிறது.

மன்னிப்பு கேட்க வேண்டும்

காளையார் கோயில் கோபுரம் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ஆலய திருப்பணி முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். விசுவாசம், பணிவு இவற்றின் இலக்கணமாக புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திகழ்கிறார். இது அவரது பாராட்டத்தக்க குணமாகும்.

இவ்வாறு இல.கணேசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x