விருதுநகர் மாவட்டத்தில் வறட்சியிலும் கொடுக்காய் புளி விளைச்சல் அதிகரிப்பு: கிலோ ரூ.200 வரை விற்பனை

விருதுநகர் மாவட்டத்தில் வறட்சியிலும் கொடுக்காய் புளி விளைச்சல் அதிகரிப்பு: கிலோ ரூ.200 வரை விற்பனை
Updated on
1 min read

பருவ மழை பொய்த்தது, தொடர் வறட்சி ஆகிய சூழ்நிலையிலும் விருதுநகர் மாவட்டத்தில் கொடுக்காய் புளி விளைச்சல் அமோகமாக உள்ளது.

காட்டுப் பகுதிகளில் மட்டுமின்றி கிராமப்புறங்களில் வீடுகளுக்கு அருகிலும் கொடுக்காய் புளி மரங்கள் வளர்ந்து வந்தன. இவை நகர வளர்ச்சியாலும், நாகரிக மாற்றத்தாலும் அழிந்து வருகின்றன.

கொடுக்காய் புளியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. நீர்ச்சத்து அதிகம் உள்ளது. வெயிலினால் ஏற்படும் கொப்பளங்கள், உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள், சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி, வாய் புண் ஆகியவற்றுக்கு கொடுக்காய் புளி பழம் மருந்தாகவும் பயன் படுகிறது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் கொடுக்காய் பழத்தை உண்பதால் ரத்தப் போக்கினால் ஏற்படும் சோர்வு, உடல் வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கொடுக்காய் புளியில் 78 கிலோ கலோரியும், நீர்ச்சத்து 77 சதவீதமும், புரதச் சத்து 3 சதவீதமும், கொழுப்புச் சத்து .4 சதவீதமும், மாவுச்சத்து 18 சதவீதமும், இழைச் சத்து 1.2 சதவீதமும், சாம்பல் சத்து .6 சதவீதமும், சுண்ணாம்புச் சத்து 13 மி.கி., பாஸ்பரஸ் 42 மி.கி., இரும்புச் சத்து .5 மி.கி., சோடியம் 19 மி.கி., பொட்டாசியம் 222 மி.கி., வைட்டமின் ஏ 15 மி.கி., வைட்டமின் பி-1 .24மி.கி., வைட்டமின் சி 133 மி.கி. சத்துக்களும் உள்ளன.

இத்தகைய சத்துக்கள் கொண்ட கொடுக்காய் புளி விருதுநகர் மாவட்டத்தில் கடும் வறட்சியையும் தாக்குப்பிடித்து இந்த ஆண்டு அமோகமாக விளைந்துள்ளது. இது குறித்து சிவகாசி அருகே உள்ள தாதம்பட்டியைச் சேர்ந்த கொடுக்காய் புளி விவசாயி தங்கப்பாண்டி கூறியதாவது:

சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கொடுக்காய் புளி சாகுபடி செய்துள்ளேன். ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்றியபோதும் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி மேற்கொண்டு வருகிறேன். இதற்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.

பொதுவாக மார்கழி மாதத்தில் பூ பிடித்து தை மாதத்தில் காய் பிடிக்கத் தொடங்கும். மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் தொடர்ந்து விளைச்சல் இருக்கும். சிவகாசி, தாதம்பட்டி, வலதூர், வாதம்பட்டி ஆகிய கிராமங்களில் ஏராளமானோர் கொடுக்காய் புளி சாகுபடி செய்துள்ளனர். கொடுக்காய் புளி மரங்களை சரியாக பராமரித்து வந்தாலே போதுமானது. கூடுதலாக எந்த செலவும் செய்யத் தேவையில்லை.

விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளனர். கொடுக்காய் புளி தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு கிலோ ரூ.120 முதல் ரூ.200 வரை விற்பனையாகிறது. இந்த ஆண்டு விவசாயம் பொய்த்தாலும் கொடுக்காய் புளி விளைச்சல் எங்களைக் காப்பாற்றியுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in