

தமிழக - கர்நாடக மக்களின் ஒற்றுமையைப் பாதுகாக்க இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கு கர்நாடக மாநிலத்தில் பரவலான எதிர்ப்பு எழுந்த நிலையில் அம்மாநில அரசு தண்ணீரை திறந்துவிட்டது. கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி மட்டும் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது. இதன் விளைவாக தமிழகத்தில் கன்னட நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளதும் ஏற்க முடியாததாகும்.
மாநில நலன்களுக்காக, உரிமைகளுக்காக குரல் எழுப்புவது வேறு. இரு மாநிலங்களிலும் உள்ள அப்பாவி மக்களையும், அவர்களது சொத்துக்களையும் தாக்குவது, நாசப்படுத்துவது, குறுகிய அரசியல் லாபங்களுக்காக இப்பிரச்சினையை இரு மாநில மக்களுக்கு இடையேயான மோதலாக மாற்றுவது ஆகியவை பிரச்சினையை தீர்க்க உதவாது.
காவிரி நதிநீர் பிரச்சினையை இரண்டு மாநில மக்களுக்கு இடையேயான மோதலாக உருவாகி விடாமல், இரு மாநில மக்களின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஜனநாயக இயக்கங்களுக்கு உள்ளது. இரு மாநிலங்களிலும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியை நிலைநாட்ட தமிழக - கர்நாடக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.