Published : 19 Jul 2016 08:14 AM
Last Updated : 19 Jul 2016 08:14 AM

தமிழகம் முழுவதும் 31 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச கையடக்க பேருந்து பயண அட்டை திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகள் வழங்கும் பணியை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 31.11 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஏழை எளிய குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்கும் வகையில் இலவசமாக கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், மடிக்கணினிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், மிதி வண்டிகள், ஊக்கத் தொகை, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு (2016-17) கல்வி ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 31 லட்சத்து 11 ஆயிரத்து 992 பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு வடிவிலான பஸ் பாஸ் வழங்கும் பணியை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இதற்கு அடையாளமாக தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் 5 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகளை முதல்வர் வழங்கினார்.

கடந்த 2015-16 கல்வி ஆண்டில் ரூ.480 கோடி செலவில் 28 லட்சத்து 5 ஆயிரத்து 578 மாணவ, மாணவிகள் இலவச பஸ் பாஸ் பெற்று பயனடைந்தனர். நடப்பு கல்வி ஆண்டில் ரூ.504 கோடி செலவில் 31 லட்சத்து 11 ஆயிரத்து 992 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இலவச பஸ் பாஸ் மூலம் பயனடைவர்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை செயலாளர் (கூடுதல் பொறுப்பு) ச.வி.சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x