

கேரளாவில் சார் ஆட்சியருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த ஜோடி அடுத்த மாதம் திருமண பந்தத்தில் இணைகிறது.
கேரள மாநிலம் அருவிக்கரை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் சபரிநாதன் (34). இவரது தந்தை கார்த்திகேயன், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்தார். உடல் சுகவீனத்தால் உயிர் இழந்ததை அடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு அருவிக்கரை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சபரிநாதன் வெற்றி பெற்றார். தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று, 2-வது முறை எம்எல்ஏவாக உள்ளார். பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான சபரிநாதன், டாடா டிரஸ்டில் முன்பு பணிபுரிந்தார்.
4 புத்தகங்கள்
இந்த நிலையில், சபரிநாதனுக்கும், திருவனந்தபுரம் சார் ஆட்சியராக உள்ள ஐஏஎஸ் அதிகாரியான திவ்யா.எஸ்.அய்யருக்கும் (32) காதல் மலர்ந்தது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சேஷ அய்யர், பகவதி அம்மாள் தம்பதியரின் இளைய மகளான திவ்யா, வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். 2014-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர், ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவர்கள் காதல் விவகாரத்தை முதலில் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தியது எம்எல்ஏ சபரிநாதன் தான். அவர் தனது முகநூல் பக்கத்தில், “எனது திருமணம் குறித்து நண்பர்களும், பொதுமக்களும் கேட்கத் துவங்கியுள்ளனர். கருத்து, விருப்பங்கள், அணுகுமுறை, வாழ்வை எதிர்கொள்வது என சகலத்திலும் என்னுடன் ஒத்த கருத்துடைய சார் ஆட்சியர் திவ்யாவை திருமணம் செய்ய உள்ளேன்” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, கேரளா முழுவதும் தற்போது இவர்களது திருமணம் பற்றிய பேச்சாகி விட்டது.
இதுகுறித்து எம்எல்ஏ சபரிநாதன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “எங்களது காதலை இரு குடும்பத்தினரிடமும் சொன்னோம். இருவருமே சம்மதித்த னர். கோட்டயத்தில் சார் ஆட்சியராக பணிபுரிந்தபோதே திவ்யாவை தெரியும். அவர் திருவனந்தபுரம் சார் ஆட்சியராக வந்த பின்னர் அடிக்கடி மக்கள் கோரிக்கைகளுக்காக சந்திக்க வேண்டி இருந்தது. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் தெரியும். அவரிடம் பேசினால் உற்சாகமாக இருக்கும். வாழ்க்கையிலும் அவரோடு இணைந்து மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்வேன்” என்றார்.
அரட்டை அரங்கத்தில் பேச்சு
சார் ஆட்சியர் திவ்யா ‘தி இந்து’விடம் கூறும்போது, “வேலூரில் கல்லூரியில் படித்தபோது விசுவின் அரட்டை அரங்கத்தில் கூட பேசியிருக்கிறேன். எனது ஆளுகைக்கு உட்பட்ட திருவனந்தபுரத்தில் 14 தொகுதிகள் உள்ளன. அதில் உள்ள 14 எம்எல்ஏக்களில் ஒருவராகத் தான் முதலில் சபரிநாதனைப் பார்த்தேன். அவரது அருவிக்கரை தொகுதியில் அதிக அளவில் பழங்குடியினர் குடியிருப்புகள் உள்ளன. அவர்களுக்கு அதிக பிரச்சினைகளும் உள்ளன. அது குறித்து பேச அடிக்கடி சபரிநாதன் வருவார்.
அடுத்த மாதம் திருமணம்
பழங்குடியினர் குடியிருப்புகளில் ஒரு மருத்துவ முகாமும் நடத்தினேன். அதில் தான் இருவரும் ஒருவருக் கொருவர் இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள முடிந்தது. அப்போதே இருவரது உள்ளத்திலும் காதல் மலர்ந்தது. இதோ கல்யாணம் வரை வந்து விட்டது. ஜூன் மாதத்தில் 3 முகூர்த்த தினங்களை குறித்துக் கொடுத்துள்ளனர். பழங்குடி மக்களின் பிரச்சினையை முழுவதுமாக தீர்ப்பதே இருவரின் முதல் பணி” என்று அதிகாரியாக மிடுக்குடன் சொல்லி விட்டே, கல்யாணப் பொண்ணு ஆகிட் டேன்ல… என்றவாறே வெட்கத்தில் முகம் சிவக்கிறார் திவ்யா ஜஏஏஸ்.
சபரிநாதனின் தந்தை கார்த்திகேய னும் காதல் திருமணம் செய்தவர்தான். அதனை கருவாகக் கொண்டு, மம்முட்டி நடிப்பில் ‘நயம் வெத்தமாகுண்ணு’ என்னும் மலையாள திரைப்படம் வெளியாகி இருந்தது.