Published : 17 Feb 2014 12:00 AM
Last Updated : 17 Feb 2014 12:00 AM

ஜெயலலிதா பிரதமரானால் ராஜபக்சேவுக்கு தண்டனை- அதிமுக கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்தியாவின் பிரதமரானால் தான் ராஜபக்சேவுக்கு தண்டனை கிடைக்கும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுக்கூட்டம் சனிக் கிழமை நடந்தது. இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக அதிக லாபம் கொடுத்துக்கொண்டிருக்கும் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி என்.எல்.சி.யின் பங்கு 5 சதவீதத்தைத் தனியாருக்கு விற்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வலுவான போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு தனது முடிவை வாபஸ் பெறவில்லை. இந்த நிலையில் தான் மத்திய அரசு விற்கும் 5 சதவித பங்கைத் தமிழக அரசு வாங்கும் என அறிவித்து அதை செய்து காட்டி சாதனை படைத்தவர் ஜெய லலிதா.

இந்த நாட்டை ஆண்டு கொண் டிருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திலும் மும்பையிலும் தாக்குதல் நடத்தினர். இவர்களுடன்தான் திமுக கூட்டணி அமைத்திருந்தது. இந்த நாட்டைப் பாதுகாக்க முடியாதவர்களை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது.

உளுந்தூர்பேட்டையில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்திய வர்கள் தற்போது டெல்லிக்குச் சென்று வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊழல் செய்தவர்களிடம் கூட்டணி குறித்து பேசுகின்றனர். இலங்கையில் 1 லட்சத்து 70 ஆயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்க வேண்டும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்தியாவின் பிரதமரானால் தான் ராஜபக்சேவுக்கு தண்டனை கிடைக்கும்.

செயின் ஜார்ஜ் கோட்டையி லிருந்து செங்கோட்டைக்கு ஜெயலலிதாவை பிரதமர் ஆக்க மக்களாகிய உங்களிடம் டிரான்ஸ்பர் பிச்சை கேட்டு வந்துள்ளேன் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x