எழுவர் விடுதலைக்கு சட்டபூர்வ நடவடிக்கை தேவை: ஸ்டாலின்

எழுவர் விடுதலைக்கு சட்டபூர்வ நடவடிக்கை தேவை: ஸ்டாலின்
Updated on
2 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கு சட்டபூர்வ நடவடிக்கையை மத்திய - மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ''மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் சிறைப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலைக்கான கூட்டியக்கத்தினர் என்னை நேரில் சந்தித்து, எழுவரின் விடுதலைக்கான முயற்சிக்கு திமுகவின் ஆதரவைக் கோரினர்.

இந்தியாவின் இளந்தலைவராக விளங்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொடூரப் படுகொலையைத் திமுக ஒருபோதும் ஆதரித்து நியாயப்படுத்தியதில்லை. அந்தப் படுகொலையின் வலியை நேரடியாக உணர்ந்ததுடன் மட்டுமின்றி, அந்தக் கொடூர நிகழ்வைக் காரணமாக வைத்து அரசியல்ரீதியாக பழிவாங்கப்பட்ட ஒரே அரசியல் இயக்கம் திமுக ஆகும். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு கடுமையானக் கண்டனம் தெரிவித்ததுடன், நேர்மையான-சட்டப்படியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அப்போது முதலே திமுக வலியுறுத்தி வருகிறது.

இந்தப் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நேரத்தில், பெண் சிறைவாசி என்ற முறையில் நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க, ராஜீவ்காந்தியின் துணைவியாரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி சம்மதம் தெரிவித்ததன் பேரில், நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி ஆளுநரிடம் 19.4.2000 அன்று பரிந்துரைத்து, தண்டனைக் குறைப்புக்கு வழிவகுத்தது திமுக அரசு. இதற்காக அதிமுக தலைமை அப்போது திமுகவைத் தேசத்துரோகி என்று வசைபாடியதையும் இங்கு நினைவுபடுத்திட வேண்டும்.

திமுகவைப் பொறுத்தவரை மரண தண்டனை கூடாது என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. சிறைவாசம் என்பது மனித மனதினை சீர்படுத்துவதற்குத்தானே தவிர, பழிவாங்குவதற்கல்ல என்பதால் தான் சிறை சீர்திருத்தங்களைத் தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசு மேற்கொண்டது.

இந்நிலையில் கருணை மனுக்கள் 11 ஆண்டுகளால் குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருந்தது மற்றும் 23 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டதைக் காரணம் காட்டி 18.2.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை ரத்து செய்தது. அந்த தீர்ப்பினை அடிப்படையாக வைத்து இந்த மூவர் உள்ளிட்ட 7 சிறைவாசிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 19.2.2014 அன்று முடிவு செய்தது.

இந்த வழக்கு மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரித்த வழக்கு என்பதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435 பிரிவின்படி விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் கருத்தைப் பெற வேண்டும். அப்படி மத்திய அரசிடம் முன் கூட்டியே கருத்துக் கேட்டிருக்க வேண்டிய அதிமுக அரசு, மூன்று நாட்களுக்குள் கெடு விதித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

அதிமுக அரசுக்கும்- மத்திய அரசுக்கும் ஏற்பட்ட அந்த கவுரவப் போரின் விளைவாக ஏழு பேர் விடுதலை என்பது சட்டச் சிக்கலுக்குள்ளாகியது. இந்த வழக்கு விசாரணை முடிவுற்று, ''இது போன்ற வழக்குகளில் மத்திய அரசை ஆலோசனை செய்து தான் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்க வேண்டும்'' என்று 2.12.2015 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பிற்குப் பிறகு 2.3.2016 அன்று அன்றைய அதிமுக அரசின் தலைமைச் செயலாளர் ஏழு பேரின் விடுதலைக்கு மத்திய அரசின் கருத்தை கேட்டு மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி, இந்த ஏழு பேரின் விடுதலை மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. ஏற்கெனவே ஒரு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் 7 பேரின் விடுதலையை சட்டரீதியாக மத்திய-மாநில அரசுகள் அணுக வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது. நளினி தன் பெண் குழந்தையைப் பிரிந்து, இந்தியாவிலேயே அதிக காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் பெண்மணியாவார். 20 வயதுக்கும் குறைவான இளைஞனாக சிறைப்பட்ட பேரறிவாளன் தன் இளமை முழுவதையும் சிறைவாழ்வில் கழித்து இன்று தன் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையிலும், உடல்நலன் சீர்கெட்டுள்ள தன் தந்தையை சந்திக்க முடியாத நிலையிலும் இருக்கிறார்.

மற்ற சிறைவாசிகளும் கால்நூற்றாண்டுக்கு மேலாக சிறைப்பட்டுள்ளனர். சி.பி.ஐ அமைப்பின் விசாரணை அதிகாரியான தியாகராஜன் போன்றவர்களே விசாரணையில் கடைப்பிடிக்கப்பட்ட ஒருதலைபட்சமான செயல்பாடுகளை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏழு பேரை விடுவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும் மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருப்பது கவலையளிக்கிறது. ஆகவே, தமிழக சட்டப்பேரவை தீர்மானம், அமைச்சரவைத் தீர்மானம் போன்றவற்றை மதித்து ஏழு பேரின் விடுதலைக்கு மத்திய அரசு தனது அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கால் நூற்றாண்டுகளுக்கு மேல் இந்த ஏழு பேரும் சிறையில் இருப்பதாலும், பேரறிவாளன் போன்றவர்கள் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாலும் இந்த 7 பேரின் மறுவாழ்வுக்காக சட்டம் வழங்கியுள்ள வாய்ப்பினை உறுதி செய்திட மத்திய அரசுக்கு அதிமுக அரசு அழுத்தம் கொடுத்து உடனடியாக அந்த அனுமதியைப் பெற்று விடுதலை செய்ய வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in