

அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறார் என தகவல்கள் வெளியான நிலையில், அவர் நேற்று போயஸ் தோட்டத்துக்கு வந்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்தார். இதன்மூலம், கடந்த 2 நாட்களாக நிலவி வந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதிமுகவில் சசிகலா அணியில் உள்ள மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவுவார் என கூறப்பட்டது. கடந்த 2 நாட்களாக அவர் போயஸ் தோட்டத்துக்கு வராததால், இந்த சந்தேகம் வலுத்து வந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் 2.15 மணி அளவில் ஆதரவாளர்களுடன் போயஸ் தோட்டத்து வந்தார் ஜெயக்குமார். அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் ஜெயக்குமாரை கண்டதும் உற்சாகம் அடைந்தனர். அவரை தோளில் தூக்கி வைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சசிகலாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அவருடன் ஜெயக்குமார் கூவத்தூர் புறப்பட்டுச் சென்றார். இதன்மூலம், கடந்த 2 நாட்களாக நிலவிவந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.