துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை ஆரம்பத்திலேயே எதிர்காதது ஏன் என தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை துறைமுகத்துக்கும் மதுரவாயலுக்கும் இடையே 19 கி.மீ. தூரம் பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இத்திட்டத்துக்கு தமிழக அரசு தற்போது ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.

இத்திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்த மனு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி சதாசிவம், இந்த திட்டத்தை தமிழக அரசு ஆரம்பதிலேயே எதிர்க்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, பறக்கும் சாலை திட்டம் கூவம் ஆற்றின் கரையில் செயல்படுத்துவதற்கு பதிலாக, ஆற்றிலேயே செயல்படுத்தப்படுகிறது. ஆற்றின் வழியிலேயே பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், மழைக்காலத்தில் தண்ணீர் ஓட்டம் தடைபட்டு வெள்ளம் வரலாம் என்று வாதிட்டார்.

மத்திய அரசு வழக்கறிஞர் இன்று ஆஜர் ஆகவில்லை, இதனால் வழக்கு விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in