

எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்முறையாக மாலை அணிவித்து பாஜகவினர் மரியாதை செலுத்தியதற்கு காரணம் அதிமுகவை கைப்பற்றவா? என்பதற்கு பாஜக மாநிலச் செயலர் ஆர்.ஸ்ரீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை நீதிமன்றம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக, மதிமுக மற்றும் பல்வேறு அமைப்பினர் நேற்று மாலை அணிவித்தனர்.
பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.ஸ்ரீனிவாசன், மதுரை மாநகர் தலைவர் சசிராமன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்தனர்.
அதிமுகவை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், முதல் முறையாக எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தது ஏன்? என்பது குறித்து ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
அதிமுகவை கைப்பற்றும் நோக்கம் எங்களுக்கு இல்லை. எம்.ஜி.ஆர். தன்னை திராவிட இயக்கத்தில் இணைத்துக்கொண்டாலும், இந்து விரோத மனப்பான்மையை நீர்த்துப்போகச் செய்தவர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை எந்த நிலையிலும் அவர் காயப்படுத்தியதில்லை.
தனி நாடு என்ற கோரிக்கையை மட்டுமல்ல, அந்த கருத்தையே கைவிடச் செய்தவர் எம்ஜிஆர். தேசத்தையோ, தேசிய ஒருமைப்பாட்டையோ ஒருபோதும் கேலி பேசியது இல்லை.
மத்திய அரசுடனும், அண்டை மாநிலங்களுடனும் எத்தகைய அரசியல் நல்லுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு எம்.ஜி.ஆர். சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். தன்னை விமர்சித்த கவிஞர் கண்ணதாசன், தாக்கிய நடிகர் எம்.ஆர்.ராதா ஆகியோரை பிற்காலத்தில் எப்படி நடத்தினார் என்பதில் இருந்தே அவருக்கு பழிவாங்கும் உணர்வு துளியும் இல்லை எனக் காட்டியவர்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் காலடி மண்ணை திருநீராக நினைப்பவர்களே பாஜக தொண்டர்கள். இந்த மரியாதையை அவரது 100-வது பிறந்த நாளில் அளித்து கவுரவப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மரியாதை செலுத்தினோம். வேறு எந்த உள்நோக்கமும் பாஜகவுக்கு இல்லை என்றார்.