Published : 21 Jul 2016 08:16 AM
Last Updated : 21 Jul 2016 08:16 AM

1,600 கோடி ரூபாய் பணத்துடன் 2 கன்டெய்னர் லாரிகள்: கரூர் அருகே நெடுஞ்சாலையில் போலீஸார் பாதுகாப்பு

மைசூருவில் இருந்து திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக் கிளைக்கு 1,600 கோடி ரூபாய் பணத்துடன் சென்ற 2 கன்டெய்னர் லாரிகளில் ஒன்று, கரூர் அருகே திடீரென பழுதாகி நின்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் மைசூரு ரிசர்வ் வங்கிக் கிளையில் இருந்து, திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக் கிளைக்கு கொண்டு செல்ல, 1,600 கோடி ரூபாய் பணம் ஏற்பட்ட 2 கன்டெய்னர் லாரிகள் நேற்று முன்தினம் புறப்பட்டன.

கரூர் மாவட்டம் மலைக்கோவி லூர் அருகே உள்ள தகரக்கொட் டகை பகுதியில் நேற்று முன்தினம் மாலை சென்றபோது, திடீரென ஒரு கன்டெய்னர் லாரி பழுதானது. இதையடுத்து 2 லாரிகளுமே அருகருகே நிறுத்தப்பட்டன.

லாரி பழுதான தகவல், மைசூரு ரிசர்வ் வங்கிக் கிளைக்குத் தெரிவிக்கப்பட்டது. 2 கன்டெய்னர் லாரிகளிலும் கோடிக்கணக்கில் பணம் இருந்ததால், பாதுகாப்புக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் லாரிகளைச் சுற்றிலும் துப்பாக்கியுடன் நின்று, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அதிக வாகனங்கள் செல்லும் கன்னியாகுமரி- காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி நின்றது. இதையடுத்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே உத்தரவின் பேரில், அரவக்குறிச்சி டிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையிலான போலீஸார், கண்டெய்னர் லாரிகளைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், மதுரையில் இருந்து உதிரி பாகம் வரவழைக்கப்பட்டு, கன்டெய்னர் லாரியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று பிற்பகல் 2 கன்டெய்னர் லாரிகளும் திருவனந்தபுரத்துக்குப் புறப் பட்டன.

அரவக்குறிச்சி தொகுதியில்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், திருப்பூரில் 3 கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடி, தேர்தல் அலுவலர்கள் சோதனையில் சிக்கியது. இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

வாக்காளர்களுக்கு அதிக அள வில் பணம் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி யில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோவிலூர் பகுதியில், தற்போது 1,600 கோடி ரூபாய் பணம் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி பழுதாகி நின்றதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த 2 கண்டெய்னர் லாரிகளுடன் டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று வந்துள்ளது. அதில், மேலாளர் தமீம் அக்தர் மற்றும் மத்திய தொழில் பாது காப்பு படையினர் 8 பேர் வந்துள்ள னர். பணத்துடன் 2 கன்டெய்னர் லாரிகள் நிற்பது குறித்து தகவலறிந்த கரூர் வருமான வரித் துறையினர் மதியம் அங்கு வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.

இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியபோது, கர்நாடகா மாநிலம் மைசூரு ரிசர்வ் வங்கி கிளையில் இருந்து 2 கண்டெய்னர் லாரிகளில் ரூ.1,600 கோடி கரன்சி நோட்டுகள் திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கி கிளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x