

சாலையின் நடுவே 4 இடங்களில் மற்ற வாகனங்கள் செல்லாத அளவுக்கு இரும்புக் கம்பிகளை ஊன்றி ஐடி நிறுவனங்கள் தடை ஏற்படுத்தி இருந்தன. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இந்த தடையை டிராபிக் ராமசாமி நீண்ட போராட்டத்துக்குப் பின் நேற்று அகற்றினார்.
பழைய மகாபலிபுரம் சாலையின் கிழக்குப் பகுதியில் அடையாறு மற்றும் இந்திரா நகரும், ஐஐடி காம்பவுன்ட் சுவரை ஒட்டியுள்ள மேற்குப் பகுதியில் கானகம், களிகுன்றம், ராம் நகர் மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளும் உள்ளன. மேற்குப் பகுதிகளில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பங்களும் இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரே டைடல் பூங்கா பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தியோ அல்லது தரமணியில் குடியிருப்புகள் நிறைந்த உட்புற இணைப்புச் சாலைகளையோ பயன்படுத்தித்தான் ஓ.எம்.ஆர். சாலைக்கு இதுவரை சென்று வந்தனர்.
தற்போது இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலை யம் முதல் திருவான்மியூர் மெட்ரோ ரயில் நிலையம் வரை உள்ள சர்வீஸ் சாலையில் திடீரென 4 இடங் களில் டைடல் பார்க் நிறுவனமும், அப்பகுதியில் செயல்படும் ஒரு தனியார் ஐடி நிறுவனமும் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக இரவோடு இரவாக நடு சாலையில் இரும்புக் கம்பிகளை நட்டு சாலையை மறித்தன. இதனால் இவ்வழியே பொதுமக்களின் வாகனங்கள் மட்டுமின்றி ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக இப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
சாலைப் பிரச்சினை தொடர்பாக பன்னீர்செல் வம் என்பவர், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘ஒரு குறிப்பிட்ட தனியார் ஐடி நிறுவனம் தனது 100-க் கும் மேற்பட்ட கார்களை இந்த சர்வீஸ் சாலையில் தடையின்றி நிறுத்தி வைப்பதற்காக இரவோடு இர வாக நடுசாலையை மறித்து தடை ஏற்படுத்தியது. போதாக் குறைக்கு டைடல் பூங்கா நிறுவனமும் சாலையை மறித்துள்ளது. இதுகுறித்து நாங்கள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தினடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
அதனால் சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியிடம் முறையிட்டோம். நேற்று அவர் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இரும்புக் கம்பிகளை எங்களுடன் சேர்ந்து பிடுங்கி எறிய முற்பட்டார். அப்போது ஐடி நிறுவனத்துக்கு ஆதரவாக வந்த போலீஸ் எஸ்ஐ, எங்கள் மீது வழக்கு போடுவோம் என மிரட்டினார். நடு சாலையை மறிக்க யார் உத்தரவு தந்தார்கள்? என கேட்டதற்கு அவர் எந்த பதிலும் சொல்லவில்லை.
கடைசியில் எங்களின் நீண்ட போராட்டத்துக்குப் பின் வேறு வழியின்றி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஊழியர்களே அந்தத் தடைகளை அகற்றி இப்போது பொதுமக்களின் வாகன போக்குரவத்தைச் சீரமைத்துள்ளனர்” என்றார்.
சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியிடம் கேட்டபோது, “ஐடி நிறுவனம் நடுசாலையை மறித்ததோடு 4 இடங்களில் கான்கிரீட் போட்டு இரும்புக் கம்பிகளை நட்டு தடை ஏற்படுத்தி இருந்தன. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்ட அந்த ஆக்கிரமிப்புகளை பொதுமக்களின் உதவியோடு அகற்றினேன்” என்றார்.