

காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை யில் செய்தியாளர்களிடம் அவர், நேற்று மேலும் கூறியது: காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, கர்நாடக முதல்வரை தமிழக விவசாயிகள் தன்னிச்சையாகச் சென்று சந்திக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.
காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழக அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டித் தீர்வுகாண வேண்டும். பழங்கள்ளிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் தலித் மக்களுக்கான வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு, தீண்டாமைக்கு எதிரான ஒடுக்குமுறையைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். சிதிலமடைந்து உள்ள தொகுப்பு வீடுகளை புதுப்பித்து தர வேண்டும். விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் உட்பட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை பேரவை நிகழ்வுகளில் இருந்து சஸ்பெண்ட் செய்தது வெட்கப்படவேண்டிய விஷயம். நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுவதுபோல தமிழகத்திலும் பாதுகாக்கப்பட, சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்து ஊடகங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்.
பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், சங்பரிவாரின் கொள்கைகளை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கை. வரும் உள்ளாட்சித் தேர்தலை மக்கள் நலக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் இணைந்து சந்திக்கும் என்றார்