

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மட்டுமன்றி வரும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களிலும் அதிமுக ஓபிஎஸ் அணி - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மட்டுமன்றி வரும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களிலும் அதிமுக ஓபிஎஸ் அணி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி தொடரும்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள அதிரடி ரெய்டு, ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் விழிப்புணர்வையும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவையும் ஏற்படுத்தும்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்லில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு ஆதரவு அளிப்பதாக வாசன் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.
ஓபிஎஸ் தலைமையிலான தர்மயுத்தத்துக்கு தமாகா ஆதரவு
அப்போது பேசிய வாசன், ''ஓபிஎஸ் அணி மூத்த நிர்வாகிகள் என்னை சந்தித்து, மதுசூதனனுக்கு ஆதரவு தருமாறு கேட்டனர். தமாகா நிர்வாகிகளும் இதே கருத்தை வலியுறுத்தினர். எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இ.மதுசூதனனை தமாகா முழு மனதோடு ஆதரிக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர் ஓபிஎஸ். அவரது தலைமையில் நடக்கும் தர்மயுத்தத்துக்கு தமாகா துணைநிற்கும். மதுசூதனனுக்கு ஆதரவாக தமாகாவினர் தேர்தல் பணியாற்றுவார்கள். ஓபிஎஸ் உடன் பிரச்சாரத்தில் பங்கேற்கிறேன்.
தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை அழைத்துச் செல்லக்கூடிய நம்பிக்கைக்குரிய கூட்டணியாக இது தொடரும்.
தொகுதியில் நடக்கும் விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும். பணநாயக முறைப்படி நடக்கக் கூடாது'' என்று அவர் தெரிவித்திருந்தார்.