

தமிழக மக்களின் நம்பிக்கையை அதிமுக அரசு இழந்துவிட்டதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மீனவர் பிரச்சினை, நீட் தேர்வு, நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட பிரச் சினைகளுக்கு தீர்வு காணாத மத் திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமாகா சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமாகா மூத்த துணைத் தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவை தங்கம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது:
காவிரியின் குறுக்கே கர்நாடகா வும், பாலாற்றின் குறுக்கே ஆந்திரா வும், பவானியின் குறுக்கே கேரளா வும் தடுப்பணைகள் கட்டி வருகின் றன. இதனால் தமிழகம் பாலைவன மாகும் ஆபத்து உள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.
மத்திய அரசுடன் போராடி தமிழகத்தின் நதிநீர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அதிமுக அரசு செயலற்றுப்போய் உள்ளது. தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப் படுவதால் ஏழை, கிராமப்புற மாண வர்களின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கனவு தகரும் சூழ்நிலை உரு வாகியுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்க வில்லை.
இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களால் தமிழக மீனவர் கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை. இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் நமது மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவுகிறது. எங்கு பார்த்தாலும் குடிநீருக்காக மக்கள் அல்லல்படும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய பாஜக அரசும், மாநிலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக அரசு தமிழக மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டது.
தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசு, ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்த திட்ட மிடுகிறது. அதிமுக அரசுக்கு தங்கள் கட்சியில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கே நேரம் போதவில்லை. மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின ருடன் ஆலோசித்து விரைவில் முடிவெடுப்போம்.
இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.