

மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டில் பைப் குண்டு வைக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுவையில் நடைபெறும் பந்த் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பந்தில் நடைபெறற கல்வீச்சு சம்பவங்களில் 5 பஸ்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
புதுவை எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டின் அருகே சக்தி வாய்ந்த பைப் வெடிகுண்டு கடந்த புதன்கிழமை வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் வெடிகுண்டை பாதுகாப்பாக கொண்டு சென்று உப்பளம் மைதானத்தில் செயலிழக்கச் செய்தனர்.
பயங்கரவாத இயக்கங்கள், அல்லது நக்சல் இயக்கத்தினரால் மட்டுமே இதுபோன்ற சக்திவாய்ந்த குண்டை வடிவமைக்க முடியும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்த விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் ஏவி.சுப்பிரமணியம், எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் அறிவித்திருந்தனர். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், மக்களின் பாதுகாப்புக்காக திட்டமிட்டபடி பந்த் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.இதன்படி சனிக்கிழமை பந்த் போராட்டம் நடநத்து.இதனையொட்டி பரபரப்பாக காணப்படும் புதுவை மத்திய பஸ் நிலையம் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. புதுவை அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
தமிழக அரசு பஸ்கள்:
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அப்போது பஸ் நிலையத்தில் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் திடீரென கல்வீசித் தாக்கியதில் 3 தமிழக அரசு பஸ்களின் கண்ணாடிகள் நொறுங்கின. தமிழக பஸ்களும் செல்லக்கூடாது என காங்கிரஸ் கட்சியினர் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி கலைத்தனர்.
தனியார் பஸ்கள் மீது கல்வீச்சு:
அதே போல் நியுடோன் தியேட்டர் வழியாகச் சென்ற 2 தனியார் கல்லூரி பஸ்கள் மீது கல்வீசப்பட்டத்தில் கண்ணாடிகள் நொறுங்கின. மொத்தம் 5 பஸ்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன.
முக்கிய கடைவீதிகளான நேரு வீதி, அண்ணா சாலை, காந்தி சாலை, மிஷன் வீதிகளில் மொத்த கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெரியமார்க்கெட் பகுதியில் காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
புறநகர்பகுதிகளான முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, வில்லியனூர்,திருக்கனூர், மதகடிப்பட்டு, பாகூரிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. புதுவை நகரில் ஆட்டோக்கள், டெம்போக்கள் இயங்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் பந்த் போராட்டத்தில் புதுவை நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஐ.ஜி. பிரவீர் ரஞ்சன் தலைமையில் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். முக்கிய பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.