

"இந்திய தேசிய காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும். காங்கிரஸால் மட்டும்தான் மக்களுக்கு நிலையான ஆட்சியைத் தர முடியும்’’ என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலத்தை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் சேலத்தில் வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியது:
இலங்கை வாழ் தமிழர் நலனுக்காக பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ். இலங்கை தமிழர் வாழ்வுக்கு பல திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. அது தடைபடக்கூடாது என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. அங்குள்ள தமிழ் மக்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து போட்டியிடுகிறது. கூட்டணி குறித்து எந்த கட்சியுடனும் பேசவில்லை. இத்தேர்தல் எங்கள் பலத்தை அறியவும், கட்சியை வலுப்படுத்தவும் நல்ல ஒரு சந்தர்ப்பமாகும்.
இதுபோன்ற வாய்ப்பு கிடைத்து பல ஆண்டுகளாகிறது. கட்சி வேட்பாளர்களின் வெற்றி பிரகாசமாக உள்ளது. இந்திய அளவில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெறும். மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கும்.
காங்கிரஸால் மட்டும்தான் மக்களுக்கு நிலையான ஆட்சியைத் தர முடியும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பல திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை மனதில் கொண்டு மக்கள் வாக்களிப்பர்.
கட்சியின் பெருந்தலைவர்கள் போட்டியிட்டால் ஒரு இடத்தில் மட்டும் பிரச்சாரம் செய்ய முடியும். போட்டியிடாததால் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்கிறோம். இதை மார்ச் 10-ம் தேதியே நான் கூறிவிட்டேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.