

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியிறக்கத்துடன் நேற்று மாலை நிறைவடைந்தது.
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மாதா ஊர்வலம், 5 மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நேற்று முன்தினம் இரவு விமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்று பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக் கப்பட்ட தேரில் பவனி வந்த புனித ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர்.
தொடர்ந்து, பேராலயத்தில் நேற்று மாதா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண் டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை 6 மணிக்கு விண்மீன் கோயிலில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. பின்னர், திருவிழா நிறைவையொட்டி, நேற்று மாலை 6 மணியளவில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது, பின்னர், கொடியிறக்கத்துடன் ஆண்டுப் பெருவிழா நிறைவடைந்தது. கொடியிறக்கப்படும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.