Published : 15 Apr 2017 01:31 PM
Last Updated : 15 Apr 2017 01:31 PM

வருமான வரி அதிகாரிகளை மிரட்டிய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்க: ராமதாஸ்

வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டிய 3 அமைச்சர்களையும், தளவாய்சுந்தரத்தையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். அதற்கு முன்பாக இவர்கள் நால்வரையும் தமிழக அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்திய வருமானவரி அதிகாரிகளை மிரட்டியதாக 3 அமைச்சர்கள் மீதும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மீதும் சென்னை பெருநகர காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரன் சார்பில் ஓட்டுக்கு ரூ.4000 வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் கடந்த 7-ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டுக்குச் சென்ற அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் அங்கு ஆய்வில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரி ஒருவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், நடிகர் சரத்குமார் வீட்டில் ஆய்வு நடத்திய அதிகாரிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வருமானவரி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் 3 அமைச்சர்கள் மீதும், தளவாய்சுந்தரம் மீதும் சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. எனினும், அதன்மீது தொடர் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

அமைச்சர்கள் மீதும், தளவாய் சுந்தரம் மீதும் வருமானவரித்துறை அளித்துள்ள புகார் சாதாரணமான ஒன்றல்ல. வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தல், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இல்லத்தில் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட குற்றங்களை இவர்கள் செய்துள்ளனர்.

பொதுவாக அமைச்சர்களாக இருப்பவர்கள் சட்டத்தை மதிப்பதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். ஆனால், அமைச்சர்களும், டெல்லி சிறப்புப் பிரதிநிதிகளும் குண்டர்களைப் போல அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டல் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, சில முக்கிய ஆவணங்களை இவர்கள் கைப்பற்றி தங்களது ஆதரவாளர்களிடம் கொடுத்ததாகவும், அதை அவர்கள் கிழித்து வீசியதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய செயல்கள் அத்துமீறல்களின் உச்சகட்டமாகும். இதுபோன்ற அத்துமீறல்களை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது.

அண்மைக்காலமாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன்ராவ் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது வருமானவரித் துறையினர் மிரட்டப்பட்டனர். கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அதிமுக அமைச்சர்களின் பினாமியாக செயல்பட்ட கரூர் அன்புநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போதும், சில மாதங்களுக்கு முன்பு சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போதும் இதேபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இத்தகையப் போக்குக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் எதிர்காலத்தில் ஆளுங்கட்சியினர் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்த முடியாத நிலை ஏற்படும்.

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாகவும் அதை அறிந்த மேலிடம் அவருக்கு முட்டுக்கட்டைப் போட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. காவல் ஆணையர் கரண் சின்ஹா அடுத்த ஓரிரு நாட்களில் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஜார்ஜ் மீண்டும் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர்கள் மீது வருமானவரித்துறை அதிகாரிகள் புகார் செய்திருப்பதைப் போன்று, வருமானவரித்துறை அதிகாரிகள் மீது விஜயபாஸ்கர் இல்ல பணியாளர் மூலம் புகார் தரப்பட்டிருப்பதாகவும், அந்தப் புகார் மூலம் வருமானவரித்துறையினருக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே ஜார்ஜ் மீண்டும் காவல் ஆணையராக நியமிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இவையெல்லாம் நடந்தால் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கை தூள்தூளாக நொறுங்கி விடும். இச்செயலை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

அமைச்சர்கள் மீது வருமானவரித் துறையினர் புகார் அளித்துள்ளனர்; அதற்கு முதற்கட்ட ஆதாரமும் இருக்கும் நிலையில் அதன்மீது நடவடிக்கை எடுப்பது தான் சரியானதாக இருக்கும். எனவே, வருமான வரி அதிகாரிகளை மிரட்டிய 3 அமைச்சர்களையும், தளவாய்சுந்தரத்தையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். அதற்கு முன்பாக இவர்கள் நால்வரையும் தமிழக அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x