

சென்னை பெருநகர மத்திய குற்றப் பிரிவு வழக்குகள், சிபிசிஐடி மெட்ரோ வழக்குகளை விசாரிக்க புதிய நீதி மன்றங்கள் நேற்று திறக்கப்பட்டன.
சென்னை எழும்பூரில் உள்ள பழமையான நீதிமன்ற கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அங்கிருந்த நீதிமன்றங்கள் அனைத்தும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள மூர்மார்கெட், அல்லிக்குளம் வணிக வளாக கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகின்றன. இதுநாள்வரை, மத்திய குற்றப்பிரிவு, சிபிசிஐடி, மத்திய அமலாக்கப் பிரிவு ஆகிய துறைகளில் பதிவாகும் வழக்குகள் சென்னை எழும்பூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதி மன்றம், கூடுதல் தலைமை குற்ற வியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன் றங்களில் விசாரிக்கப்பட்டு வந்தன.
அதிக வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதால், வழக்குகளின் விசாரணையில் தாம தம் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்யும் வழக்குகளை மட்டும் விசா ரிக்க தனி நீதிமன்றம் அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேபோல, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்பு சட்டத் தின் கீழ் பதிவாகும் வழக்குகள் வழக்க மான குற்றவியல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்தன.
எனவே, இந்த வழக்குகளை விசாரிக்கவும் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 2 புதிய நீதிமன்றங்கள் உருவாக்குவது குறித்து சில பரிந்துரைகளை தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நிர்வாகம் அனுப்பி வைத்தது. இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, அல்லிக்குளம் வணிக வளாகத்தில் புதிதாக 2 நீதிமன்றங்களை திறக்க ஒப்புதல் அளித்தது.
அதன்படி, புதிய நீதிமன்றங்கள் நேற்று திறக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் நீதிமன்றத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன், தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.