ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாட்ஸ் அப் மூலம் தொகுதியின் தேவைகள் சேகரிப்பு: தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஓபிஎஸ் அணி தீவிரம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாட்ஸ் அப் மூலம் தொகுதியின் தேவைகள் சேகரிப்பு: தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஓபிஎஸ் அணி தீவிரம்
Updated on
1 min read

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை, அதிமுக சார்பில் மூன்று அணிகள் களமிறங்குகின்றன. இதில், தீபா பேரவையை தவிர்த்து, சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர், இரட்டை இலை சின்னத்தை யார் தக்க வைப்பது என்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 23-ம் தேதியுடன் வேட்பு மனுத்தாக்கல் முடிகிறது. அன்றே, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்களான டி.டி.வி.தினகரன் மற்றும் இ.மதுசூதனன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர். அதற்கு முன் 22-ம் தேதி சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம், சின்னம் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார். அவரது அணியின் வேட்பாளர் இ.மதுசூதனன் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். முதல்கட்டமாக, தொகுதியில் குறிப்பிட்ட பகுதிகளில் சென்று, அங்குள்ள மக்கள் மத்தியில் பேசி, வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ஆதி ஆந்திர மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.

இது தவிர, ஓபிஎஸ் அணியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பிரச்சாரம் செய்யும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ராஜேஷ் கூறியதாவது:

ஆர்.கே.நகரில் 80 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங்களில் ஒருவரிடமாவது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் கைபேசி இருக்கும். மேலும், அந்த பகுதியில் படித்த இளைஞர்கள் இருப்பார்கள். இந்த பகுதியில் 256 பாகங்கள் உள்ளன. ஒரு பாகத்துக்கு 4 அல்லது 5 இளைஞர்கள், அவர்களிடம் உள்ள கைபேசியில் இருந்து ஒருவருக்கு 250 குடும்பம் என்ற வகையில், வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள், தொடர்ந்து அந்த குடும்பங்களுடன் இணைப்பில் இருப்பார்கள்.

இதன் மூலம், தொகுதிக்கு தேவையான விஷயங்கள், தொகுதி பிரச்சினைகள் குறித்த தகவல்கள் பெறப்படும். ஏற்கெனவே வேட்பாளர் இ.மதுசூதன் இந்த தொகுதியில் தேர்வு செய்யப்பட்டு, அமைச்சராக இருந்து பணியாற்றியவர் என்பதால், அவர் மூலம் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள் ஆராயப்பட்டு, மக்களுக்கு தெரிவிக்கப்படும். இதன் அடிப்படையில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வாட்ஸ் அப் ஒருங்கிணைப்புக்கு தேவையான பணிகளை எங்கள் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in