

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், சென்னையில் ஆட்டோ மீட்டர் முறையை அமல்படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, ஆட்டோ ஒட்டுநர்கள், பயணிகள் அமைப்பினர் ஆகியோரிடம் கருத்துக்களைக் கேட்டு புதிய கட்டணத்தை அரசு நிர்ணயித்தது.
அதன் பிறகு, புதிய கட்டண முறையை விளக்கும் கட்டண அட்டையை, உரிய ஆவணங்களைக் காட்டி, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒட்டுநர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களைக் கண்டறி யும் சோதனையையும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
61,250 ஆட்டோ
நகரில் உள்ள 71 ஆயிரம் ஆட்டோக்களில், வியாழக்கிழமை வரை 61,250 ஆட்டோக்கள் கட்டண அட்டையைப் பெற்றிருப்பதாக `தி இந்து’ நிருபரிடம் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இந்த சோதனையில் சிக்காமல் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இதுதவிர, அதிகாரிகளின் சோதனை நடவடக்கையில் முறையான ஆவணங்கள் இன்றி இயங்கிய 2170 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடைசி 4 நாள்
இதுதவிர, புதிய கட்டண விகிதத்துக்கேற்ப ஆட்டோ மீட்டர்களை திருத்தி அமைக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதியான அக்டோபர் 15-ந் தேதி முடிவடைய இன்னும் 4 நாட்களே உள்ளன. இதனால் மீட்டர் மெக்கானிக் கடைகள் நிரம்பி வழிகின்றன. எனவே, இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் புகார்
இதற்கிடையே, ஆட்டோ ஒட்டுநர்கள், புதிய கட்டணத்தின்படியும் மீட்டரை போட்டும் ஓட்டுவதில்லை என்று பரவலாக புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். 2007-ம் ஆண்டு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டபோது, போதிய ஊழியர்கள் இல்லாததால், உரிய கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் அதை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.