Last Updated : 04 Mar, 2014 12:00 AM

 

Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 12:00 AM

ஷீலா பாலகிருஷ்ணன் இம்மாத இறுதியில் ஓய்வு- போட்டிக்களத்தில் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள்

தமிழக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அடுத்த தலைமைச் செயலாளராக யாரை நியமிப்பது என்று தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் 41-வது தலைமைச் செயலாளராக கேரளத்தை சேர்ந்த ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் 1976-ம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்த வராவார்.

அவரது பதவிக்காலம் வரும் மார்ச் 31-ம் தேதியுடன் முடி வடைகிறது. இதனால் அடுத்த தலைமைச் செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங் களை ஷீலா பாலகிருஷ்ணன் நன்கு அறிந்தவர் என்பதால் அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு என்று தலைமைச் செயலகத்தில் சில அதிகாரிகள் கூறுகின்றனர்.

அப்படி அவருக்கு பதவி நீட்டிப்பு தருவதாக இருந்தால் மத்திய அரசிடம் அதற்கு தமிழக அரசு அனுமதி பெறவேண்டும். ஒருவேளை அதற்குள் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், மத்திய தேர்தல் ஆணையத்திடம் நீட்டிப்புக்காக அனுமதி பெற வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதனால், தேவையற்ற பிரச்சினை களைத் தவிர்க்க புதிய அதிகாரியை தமிழக அரசு தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு உள்ளது என்று வேறு சில அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒருவேளை, ஷீலா பாலகிருஷ்ணனுக்கு பதவி நீட்டிப்பு தராமல் போகும் பட்சத்தில், பத்துக்கும் மேற்பட்ட, தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள (கூடுதல் தலைமைச் செயலாளர் என்றழைக்கப்படுகின்றனர்) மூத்த அதிகாரிகளில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான “பேனல்” தயாரிக்கப்பட்டு வருவதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வரின் செயலாளர் ஷீலா பிரியா, ஷீலா ராணி சுங்கத், எம்எப். பரூக்கி ஆகியோர் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளதால் அவர்களது பெயர்கள் பரிசீலிக்கப்படுவதற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.

கடந்த முறை, ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளராக நியமிக்கப்படும்போது, அவரை விட பணிமூப்பு பெற்றவரான டி.எஸ்.ஸ்ரீதர், தலைமைச் செயலகத்தில் வகித்து வந்த பதவியில் இருந்து இடமாற்றம் செய்து, தற்போது அவர் வகித்து வரும் பதவியில் (வருவாய் துறை நிர்வாக ஆணையர்) நியமிக்கப்பட்டார். அவர், டேராடூன் வெள்ளம், அந்தமான் படகு விபத்து, வறட்சி நிவாரணம் போன்ற பணிகளில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். எனவே அவர் அடுத்த தலைமைச் செயலர் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அதற்கு அடுத்தபடியாக, மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தனர். அதற்குப் பிறகு, வி.கே.சுப்புராஜ், சுர்ஜித் கே.சௌத்ரி, கிரிஜா வைத்தியநாதன், டாக்டர் கண்ணன் போன்ற 1981ஆம் ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சேர்ந்த அதிகாரிகள் சிலரும் அவ்வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.

எனினும், 42-வது தலைமைச் செயலாளராக இவர்களில் யார் உறுதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறித்து இந்த வார இறுதிக்குள் அரசு இறுதி முடிவெடுக்கக்கூடும் என்று ஓர் உயர் அதிகாரி கூறினார்.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் கேட்டபோது, தலைமைச் செயலாளர் ஓய்வுபெறுவது தங்களது கவனத்துக்கு வந்துள்ளது என்றும், தமிழக அரசின் நடவடிக்கையைப் பொருத்து தங்களது தலையீடு தேவையிருக்குமா, இல்லையா என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x