

சீனாவில் இன்ஜினீயரிங் படித்து வரும் ஒரு மாணவர், மோடி உருவிலான பென்–ட்ரைவ் ஒன்றினை கண்டுபிடித்துள்ளார். இது சென்னையில் செவ்வாய்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மோடி ரன் என்ற ஆண்ட்ராய்ட் விளையாட்டு, ஆண்ட்ராய்ட் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பா.ஜ.க சார்பில் நமோ டீக்கடை, நமோ மீன்கடை போன்றவை தொடங்கப்பட்டன. இந்நிலையில் சீனாவில் இன்ஜினீயரிங் படித்துவரும் தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் என்ற மாணவர் மோடி உருவிலான பென் – ட்ரைவினை உருவாக்கியுள்ளார். 2ஜிபி, 4 ஜிபி, 8 ஜிபி அளவில் கிடைக்கும் இந்த பென் –ட்ரைவிற்கு ‘நமோ பென் –ட்ரைவ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நமோ பென் –ட்ரைவின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. பாஜக தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் தி இந்துவிடம் கூறுகையில், “மதுரவாயலை சேர்ந்த சண்முகநாதன் மோடி உருவம் பொறித்த பென் – ட்ரைவினை வடிவமைத்திருந்தார். அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு நமோ பென்–ட்ரைவ் என்ற பெயருடன் அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்றார்.